Pages

Monday, June 3, 2013

உதவிப் பேராசிரியர் தேர்வு நடைமுறையில் பிஎச்.டி. தகுதிக்கு முன்னுரிமை கூடாது

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையில் பிஎச்.டி. தகுதிக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என நெட், ஸ்லெட் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 19-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.

மொத்தம் 34 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறவுள்ளது. பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதியைப் பொருத்தவரை பிஎச்.டி. பெற்றவர்களுக்கு 9 மதிப்பெண்கள், எம்.பில். பட்டத்துடன் நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு 6 மதிப்பெண்கள், பட்ட மேற்படிப்புடன் நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

இந்நிலையில், கல்வித் தகுதிக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் மாற்றம் தேவை; விதிவிலக்கு கல்வித் தகுதியான பிஎச்.டி.க்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என கல்லூரிப் பேராசிரியர்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு மற்றும் மாநில தகுதித் தேர்வு சங்கம் (நெட், ஸ்லெட் சங்கம்) தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சங்கச் செயலாளர் ஏ.ஆர். நாகராஜன் கூறியதாவது: ஆசிரியர் தேர்வாணையம் கல்வித் தகுதிக்கு மதிப்பெண் வழங்கிய முறையைப் பார்க்கும்போது, தமிழக அரசின் அரசாணையைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறையின்படி, கல்லூரிப் பேராசிரியர் பணியிடத்துக்கான தகுதி என்பது தேசிய, மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் (நெட், ஸ்லெட்) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என்பதே.

பிஎச்.டி. விதிவிலக்குத் தகுதி மட்டுமே: பிஎச்.டி. தகுதி என்பது நெட், ஸ்லெட் தேர்வுகளில் வெற்றி பெறாதவர்களுக்கு விதிவிலக்காக அளிக்கப்பட்ட தகுதி மட்டுமே. வெறும் பிஎச்.டி.க்கு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. யு.ஜி.சி. வெளியிட்டுள்ள 2009-ஆம் ஆண்டு விதிமுறைகளுக்கு உள்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிஎச்.டி.க்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படும்.

இதன்படி எழுத்துத் தேர்வு, கோர்ஸ் வொர்க், யுஜிசி இணையதளத்தில் பதிவு என பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

தகுதியற்றவர்களே நியமனம்: தமிழக அரசு 2011-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில் (எண் 305) குறிப்பிட்டுள்ள விதிமுறைகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் கவனத்தில் கொள்ளவில்லை. கடந்த முறை கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர் நியமனத்தின்போது, வெறும் பிஎச்.டி. தகுதி கொண்டவர்கள் ஆயிரம் பேருக்கு 800 பேர் என்ற அளவில் நியமனம் செய்யப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கோரியும் உரிய பதில் இல்லை.

பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகள், நூலகர் தேர்வு, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர் தேர்வின்போது, எழுத்துத் தேர்வு முறை பின்பற்றப்பட்டது. கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பது தெரியவில்லை.

முறைகேடு நடக்க வாய்ப்பு:பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் வெறும் பிஎச்.டி தகுதியுடன், பணி அனுபவத்துக்கான முழு மதிப்பெண்களையும் பெற்று 24 மதிப்பெண்களுடன் நேர்முகத் தேர்வுக்குச் செல்கின்றனர். 24 மதிப்பெண்கள் என்ற பிரிவில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் இருப்பதால், நேர்முகத் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. லஞ்சம் கைமாறவும் அதிக வாய்ப்புள்ளது.

நேர்முகத் தேர்வுக்கு மட்டும் 10 மதிப்பெண்கள் என்பது ஏற்புடையதல்ல. யுஜிசி அறிவுறுத்தலின்படி எழுத்துத் தேர்வின் மூலம் மட்டுமே நேர்முகத் தேர்வில் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

நெட். ஸ்லெட் தகுதிக்கு முன்னுரிமை: கல்வித் தகுதியைப் பொருத்தவரை பிஎச்.டி. தகுதிக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது. உண்மையான கல்வித் தகுதிக்கு குறைவான மதிப்பெண்ணும், விதிவிலக்கு கல்வித் தகுதிக்கு அதிக மதிப்பெண்ணும் வழங்கப்படும் இந்நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

1) பிஎச்.டி.யுடன் நெட் அல்லது ஸ்லெட் 2) எம்.பில் உடன் நெட் அல்லது ஸ்லெட் 3) பட்ட மேற்படிப்புடன் நெட் அல்லது ஸ்லெட் 4)பிஎச்.டி மட்டும் என்ற வரிசைப்படி மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். இவை குறித்து ஏற்கெனவே முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு பலமுறை அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறையால் முறையான தகுதியுடையவர்கள் 5 சதவீத அளவுக்கு மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விதிவிலக்கு கல்வித் தகுதி கொண்டவர்கள் அதிகளவு பணி நியமனம் பெற்றுள்ளனர்.

2 comments:

  1. Sir i need mobile number for State secretary/SLET. I am SLET candidate

    ReplyDelete
  2. I too want it. Please let me know that. Publish that information here in this section.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.