Pages

Monday, June 3, 2013

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடுஅவகாசம் அளித்து கலெக்டர் உத்தரவு

"பள்ளிகளில் சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ள, 25 சதவீத இடஒதுக்கீடு படி, ஆதரவற்ற குழந்தைகளை சேர்க்க வரும், 20ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என, தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் கூறினார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குழந்தைகளின் இலவச கட்டாய கல்விச்சட்டப்படி, மெட்ரிக்., பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில், (சிறுபான்மையினர் சுயநிதி பள்ளிகள் தவிர) நுழைவு வகுப்புகளில் (எல்.கே.ஜி., மற்றும் ஆறாம் வகுப்பு), 25 சதவீத இடங்கள், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால் அதன்படி, இன்னும் பெரும்பாலான பள்ளிகளில் சேர்க்கை முழுமையாக நிறைவடையவில்லை என, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதற்கு வரும், 20ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ள, 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி, முழுமையாக சேர்க்கையை நடத்த வேண்டும்.இதற்குரிய விண்ணப்பங்கள், தஞ்சை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மற்றும் மெட்ரிக்., பள்ளி ஆய்வாளர் அலுவலகங்களில் வரும், ஐந்தாம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும். இதை பூர்த்தி செய்து வரும், ஏழாம் தேதி மாலை ஐந்து மணிக்குள் உரிய ஆவணத்துடன், முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக்., பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.மேற்கண்ட விண்ணப்பத்துடன் தாசில்தாரிடம் பெறப்பட்ட வருமான சான்று, சாதிச்சான்று, வாய்ப்பு மறுக்கப்பட்டவர் என்பதற்கான சான்று ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களான ஆதரவற்ற குழந்தைகளுக்கு, சமூகநலத்துறை அலுவலரும், ஹெச்.ஐ.வி., பாதிப்புக்கு ஆளானவர் குழந்தைகள், அரவாணி குழந்தைகளுக்கு பொது சுகாதாரத்துறை மருத்துவ அலுவலரும், நகராட்சி, டவுன் பஞ்., செயல் அலுவலரும், பஞ்., தலைவரும், இதர துப்புரவாளர் குழந்தைகளுக்கு, மாவட்ட கலெக்டரும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மறுவாழ்வு அலுவலரும் சான்று வழங்க வேண்டும்.இதில் எல்.கே.ஜி., மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும். எல்.கே.ஜி., வகுப்பு சேர்க்க பள்ளி அமைந்துள்ள இடத்துக்கும், குழந்தைகளின் இருப்பிடத்துக்கும், ஒரு கி.மீ., தூரம் இருக்க வேண்டும். ஆறாம் வகுப்பில் சேர்க்க பள்ளி அமைந்துள்ள இடத்துக்கும், குழந்தைகளின் இருப்பிடத்துக்கும் இடையே, மூன்று கி.மீ., தூரத்துக்குள் இருக்க வேண்டும்.நலிவுற்ற பிரிவினர் ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.