Pages

Tuesday, June 18, 2013

தமிழகத்தில் 44 டி.இ.ஓ., பணியிடங்கள் காலி: நலத்திட்டங்கள் வழங்குவதில் சிக்கல்

மாநிலம் முழுவதும் 44 மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட 59க்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகிய பணியிடங்களும், தேர்வுத்துறை இணை இயக்குநர் (மேல்நிலை) உள்பட மூன்று இணை இயக்குநர் பணியிடங்களும் கடந்த நான்கு மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன.
இதுதவிர, பள்ளிக்கல்வித்துறையின் கீழ், 44 மாவட்ட கல்வி அதிகாரிகள், 10 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொருளாளர் நடராசன் கூறுகையில்,""விருதுநகர், சிவகங்கை ஆகிய இரண்டு மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வித்திட்ட கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என இரண்டு பணியிடங்களும் காலியாக உள்ளன. மேலும், திருநெல்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணி இடங்களும், திருவாரூர், கரூர், செய்யாறு, மத்திய சென்னை, உள்ளிட்ட 44 கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. தற்போது, அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் மட்டுமே, வழங்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்பும் பட்சத்தில், நலத்திட்டங்களை மாணவர்களிடம் எளிதாக கொண்டு செல்ல இயலும்,'' என்றார். மாவட்ட நிர்வாகங்களை கவனிக்க வேண்டிய இயக்குனர் பணியிடங்களும், பள்ளிகளின் செயல்பாடுகளை சரிசெய்து கொடுக்கவேண்டிய மாவட்ட கல்வி அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக இருப்பது, பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாக செயல்பாடுகளை பாதிக்கும். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறுகையில்,"" இயக்குநர், இணை இயக்குநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நியமிப்பது அவசியம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த பணியிடங்கள் உட்பட அனைத்து கல்வி அதிகாரிகள் பணியிடங்களும் நிரப்பப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.