Pages

Saturday, June 1, 2013

12 சென்னை மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் சென்னை பள்ளிகளில் 12 பள்ளிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. சென்னை பள்ளிகள் ஒட்டுமொத்தமாக 91.47 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டைவிட கூடுதலாகும்.
கடந்த 2012-இல் 9,313 மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் 8,097 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தேர்ச்சி விகிதம் 86.94 சதவீதமாகும். இந்த ஆண்டு 8,788 பேர் தேர்வில் பங்கேற்று 8,038 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 797 மாணவ, மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சிப் பெற்றிருந்தனர். இப்போது 1,558 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

பாட வாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் கடந்த ஆண்டு 18 பேர் மட்டுமே. ஆனால், இப்போது 258 மாணவ, மாணவிகள் பாட வாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: கடந்த ஆண்டு கே.பி. சாலை சென்னை உயர்நிலைப் பள்ளி, கண்ணம்மாபேட்டை சென்னை உயர்நிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகள் மட்டுமே 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

இந்த ஆண்டு கொடுங்கையூர் சென்னை உயர்நிலைப் பள்ளி, குக்ஸ் சாலை சென்னை உயர்நிலைப் பள்ளி, ஷர்மா நகர் சென்னை உயர்நிலைப் பள்ளி, பெரம்பூர் மார்க்கெட் சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மெக் நிக்கல்ஸ் சாலை சென்னை உயர்நிலைப் பள்ளி, லாயிட்ஸ் சாலை சென்னை மேல்நிலைப் பள்ளி, வி.பி. கோயில் சாலை சென்னை மேல்நிலைப் பள்ளி, வன்னிய தேனாம்பேட்டை சென்னை உயர்நிலைப் பள்ளி, ஜாஃபர்கான்பேட்டை சென்னை உயர்நிலைப் பள்ளி, அடையாறு கெனால் பாங்க் சாலை சென்னை உயர்நிலைப் பள்ளி, கே.பி. சாலை சென்னை உயர்நிலைப் பள்ளி, ஆழ்வார்பேட்டை சென்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய 12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளன.

61 பள்ளிகள் 80 சதவீதத்துக்குமேல் தேர்ச்சி: சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் 70 சென்னை பள்ளிகளில் 61 பள்ளிகள் 80 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி விகிதம் பெற்று சாதனை படைத்துள்ளன. 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான தேர்ச்சி விகிதத்தை 9 பள்ளிகள் பெற்றுள்ளன.

ஒரே ஒரு பள்ளி மட்டும் 60 சதவீதத்துக்கு குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.

அதாவது சென்னை மணிகண்டன் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி 58.7 சதவீத தேர்ச்சிப் பெற்று சென்னை பள்ளிகள் அளவில் மிகக் குறைந்த தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது.

இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 46 பேரில் 27 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.



"ஹாட்ரிக்' சாதனை

சென்னை பள்ளிகளைப் பொருத்தவரை கே.பி.சாலை சென்னை உயர்நிலைப் பள்ளி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ("ஹாட்ரிக்' ) 100 சதவீத தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனை குறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செ. கிளாடிஸ் ஆரோக்கிய மேரி கூறியது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எங்களுடைய பள்ளி தொடர்ந்து மூன்று முறை 100 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பது பெருமையாக உள்ளது. ஆசிரியர்களுடன் இணைந்து முறையாக திட்டமிட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதே இதற்கு காரணம்.

முதலில் படிப்புத் திறன் அடிப்படையில் மாணவர்களை தனித் தனிக் குழுக்களாக பிரித்து விடுவோம். இதில் பின்தங்கிய அதாவது மெதுவாகப் புரிந்துகொள்ளும் மாணவர்களுக்கு காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, அவர்களின் கற்கும் திறனைக் கண்டறிந்து அதனடிப்படையில் அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்துகிற முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை எங்களுடைய பள்ளி பெற்று வருகின்றது என்றார்.



மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி



சென்னை பள்ளிகள் அளவில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே சாதனை படைத்துள்ளனர்.

சென்னை பள்ளிகள் அளவில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 93.7 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.7 சதவீதம்.

மேலும், சென்னை பள்ளிகள் அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களும் மாணவிகளே.

100 சதவீத தேர்ச்சியிலும் சாதனை

சென்னை பள்ளிகள் அளவில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 12 பள்ளிகள் அல்லாமல், பிற சென்னை பள்ளிகளைக் கணக்கிடும்போது 14 பள்ளிகளில் மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களைப் பொருத்தவரை கூடுதலாக 3 பள்ளிகளில் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.