Pages

Thursday, May 16, 2013

கல்லூரி சீட்டுக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

"பிரபல, நிகர்நிலை பல்கலைகள், மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில், இடம் வாங்கித் தருவதாக கூறும், புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" என போலீசார் எச்சரித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த, 9ம் தேதி வெளியாகின. இதையடுத்து, கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் வழங்கி வருகின்றனர்.

மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம், வேளாண் அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டின் படி, கவுன்சிலிங் நடைபெறும். இதில், விரும்பிய இடத்தில், "சீட்" கிடைக்காதவர்கள், தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேர்கின்றனர்.

இவ்வாறு தனியார் கல்லூரிகளை நாடுவோரை குறி வைத்து, "சீட்" வாங்கித் தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கடந்த ஆண்டு, சென்னையில் மட்டும், பிரபல தனியார் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகளில், "சீட்" வாங்கி தருவதாக கூறிய புரோக்கர்களிடம், 100க்கும் மேற்பட்டோர், 12 கோடி ரூபாய் வரை கொடுத்து ஏமாந்துள்ளனர்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, பிரபல அரசு உதவி பெறும் கல்லூரியில், பி.காம்., "சீட்" வாங்கி தருவதாகக் கூறி, 30 பேரிடம், 10 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியுள்ளனர். இது போன்ற மோசடி வழக்கில், ஒரு பெண்ணே, கடந்தாண்டில் சிக்கினார்.

இதற்காக, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில், கல்வி ஆலோசனை மையம் என்ற பெயரில், சில அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவர்களின் நடவடிக்கைகளை, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்த ஆண்டும், "சீட்" வாங்கி தருவதாகக் கூறி, புரோக்கர்கள் நடமாட தொடங்கி விட்டனர். இதுதவிர சீனியர் மாணவர்கள் சிலரும், "சீட்" வாங்கி தரும் புரோக்கர்களாக மாறி, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, "சீட்" விவகாரம் தொடர்பாக, கல்லூரி நிர்வாகத்தை நேரடியாக அனுக வேண்டும் எனவும், புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.