Pages

Thursday, April 25, 2013

தமிழ் வழியில் பி.எல்., பட்டம் பெற்றவர் சிவில் நீதிபதியாக தேர்வானது செல்லும்: உயர் நீதிமன்றம்

"தமிழ் வழியில், பி.எல்., படித்த பெண்ணை, சிவில் நீதிபதியாக, தேர்ந்தெடுத்தது செல்லும்" என, சென்னை ஐகோர்ட், உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்நத வழக்கறிஞர் செர்ஜியா பிந்து. கடந்த ஆண்டு நடந்த சிவில் நீதிபதி பணிக்கான தேர்வில் கலந்து கொண்டார். எழுத்துத் தேர்வில் 166; நேர்முகத் தேர்வில் 18 என, 184 மதிப்பெண்கள் பெற்றார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். தேர்வுப் பட்டியலில், இவர் இடம் பெறவில்லை.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், செர்ஜியா பிந்து தாக்கல் செய்த மனு: சிவில் நீதிபதியாக தேர்வு பெற, எனக்கு தகுதி உள்ளது. ஜெனிதா என்பவர், 183, மதிப்பெண் பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், தமிழ் வழியில் படித்ததால், முன்னுரிமை அடிப்படையில் தேர்வு பெற்றதாக கூறப்படுகிறது;

ஆனால், மதுரை, சட்டக் கல்லூரியில், தமிழ் வழியில் பி.எல்., படிப்பு நடத்தப்படவில்லை. சட்டப் படிப்புகளுக்கான இயக்குனர் அலுவலகம் அளித்த தகவலின்படி, ஐந்து ஆண்டு, பி.எல்., படிப்பு, ஆங்கில வழியில் தான் நடத்தப்படுகிறது. தமிழ் வழியில் படித்ததாக கூறி, ஜெனிதாவை நியமித்தது சட்டவிரோதமானது. என்னை சிவில் நீதிபதியாக நியமிக்க வேண்டும். ஜெனிதா நியமனத்தை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதிகள் பாஷா, என்.பால்வசந்தகுமார் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்" விசாரித்து, பிறப்பித்த உத்தரவு:

"தமிழ் வழியில் பி.எல். பட்டம், எழுத்துத் தேர்வும், தமிழில் எழுதியிருப்பதால், முன்னுரிமை பெற, ஜெனிதாவுக்கு உரிமை உள்ளது. அவர், சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளார். இதில், எந்த குறைபாடும், சட்ட விரோதமும் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது." இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.