Pages

Thursday, April 25, 2013

பொறியியல் கல்லூரி தேர்ச்சி சதவீதம் வெளியிடக் கோரி வழக்கு

பொறியியல் கல்லூரிகளின், மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தை வெளியிடும்படி, அண்ணா பல்கலைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, இம்மாதம், 29ம் தேதிக்கு, ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த, பூபாலசாமி என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில், காளான்கள் போல், பொறியியல் கல்லூரிகள் பெருகியுள்ளன. சில பொறியியல் கல்லூரிகள், தர வரிசையில் முன்னணியில் இருப்பதாக, விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இதை நம்பி, மாணவர்களும் அந்தக் கல்லூரிகளில் சேர்கின்றனர்.

பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களில், 60 சதவீதம் பேர், கிராமப்புற பகுதியைச் சேர்ந்த மாணவர்கள். இவர்களுக்கு, பொறியியல் கல்லூரிகள் பற்றிய, உண்மை நிலை தெரிவதில்லை. அந்தக் கல்லூரிகளை பற்றி எங்கே விசாரிப்பது என்பதும் தெரிந்திருக்கவில்லை. சில கல்லூரிகள், ஒரே பெயரில், சிறிய அளவில் மாறுபாட்டுடன் இயங்குகிறது.

அடிப்படை வசதிகள், வலுவான ஆசிரியர்கள், வளாக தேர்வு என, உள்கட்டமைப்பு கொண்டதாக, பல ஆண்டுகளாக, ஒரு கல்லூரி இயங்கிக் கொண்டு இருக்கும். அதே கல்லூரி நிர்வாகம், அதே பெயரில், சமீபத்தில் ஒரு கல்லூரியை துவக்கியிருக்கும். உள்கட்டமைப்பு கொண்ட, புகழ்பெற்ற கல்லூரியில் சேர்கிறோம் என நினைத்து, சமீபத்தில் துவக்கியுள்ள கல்லூரியில், சேர்ந்து விடுகின்றனர்.

ஒரே பெயரில், வெவ்வேறு நிர்வாகங்கள் கல்லூரிகளை நடத்துகின்றன. அப்பாவி மாணவர்கள் தான், இதனால் பாதிக்கப்படுகின்றனர். பொறியியல் கல்லூரிகளின் பெயர்கள், அங்குள்ள படிப்புகள், விடுதி வசதிகள், முகவரி அடங்கிய, குறிப்பேட்டை, அண்ணா பல்கலை, ஆண்டுதோறும் தயாரிக்கிறது. அந்த கல்லூரிகளில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதத்தையும், அதோடு சேர்க்க வேண்டும்.

மாணவர்களுக்கு, கல்லூரிகள் பற்றிய விவரங்களை தெளிவுபடுத்த வேண்டும். எனவே, மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேட்டில், ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், ஒரே பெயரில் இயங்கும் கல்லூரிகளை வேறுபடுத்தும் அம்சங்கள், இடம் பெற உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய முதல்பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கும், அண்ணா பல்கலைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை, இம்மாதம், 29ம் தேதிக்கு, தள்ளிவைத்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.