ஓய்வு என்றால் என்ன? எந்த வேலையும் செய்யாமல் "சும்மா' உட்கார்ந்திருப்பதுதான் ஓய்வு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஓய்வு என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வேலையில் தவறு மற்றும் சலிப்பு
ஏற்படாமல் இருக்க, தாற்காலிகமாக வேறு பணியைச் செய்து நம் உடலையும், மனதையும் உற்சாகப்படுத்திக் கொள்வதாகும். காலம் பொன் போன்றது; மனிதன் தன் வாழ்க்கையில் பணம், பதவி, பொன், பொருள் என எதை இழந்தாலும் மீண்டும் பெற்று விடலாம். ஆனால், காலம் என்ற ஒன்றை மட்டும் மீண்டும் பெறவே முடியாது. ஓய்வு என்ற பெயரால் காலத்தை வீணடிக்கும் சோம்பேறித்தனமே நம் முன்னேற்றங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஓய்வுபற்றிய இந்த சோம்பேறிக் கோட்பாடு, நமது குழந்தைகள் இதயத்திலும் வேரூன்றத் தொடங்கியுள்ளன. ஆண்டு முழுவதும் படித்துக் களைத்து, தேர்வுகளும் முடிந்துவிட்டதால், வரும் மே மாதம் முழுவதும் ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறி, காலை பொழுது விடிந்தது முதல், இரவு உறங்கச் செல்லும்வரை தொலைக்காட்சி பெட்டியே கதியெனக் கிடந்து தங்கள் உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்கின்றனர். அல்லது கொளுத்தும் கோடை வெயில் முழுவதும் என் தலையில்தான் என கையில் கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு மைதானத்துக்கு ஓடிவிடுகின்றனர். மாணவர்களின் இதுபோன்ற விடுமுறைக் காலங்களைப் பயனுள்ளதாக மாற்றுவது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது. ஒவ்வொரு விடுமுறையிலும் மாணவன் கற்றுக் கொள்ளும் ஏதேனும் ஒரு விஷயம், அவன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பயனளிக்குமாறு அவர்களின் விடுமுறைக் காலத்தைப் பயனுள்ள வழியில் கழிக்க நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, இப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் அப்பாவுக்கு, அம்மாவுக்கு, அண்ணனுக்கு என நான்கைந்து செல்போன்கள் உள்ளன. அவற்றில் பழுது ஏற்பட்டால் சரி செய்ய உதவும் செல்போன் சர்வீஸிங் பயிற்சிக்கு ஆண் பிள்ளைகளை அனுப்பலாம். இதன் மூலம் தங்கள் வீட்டு செல்போன் மட்டுமின்றி, நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் செல்போன்களைப் பழுது நீக்கி, பகுதிநேர தொழிலாகக் கூட செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கையாகவே அவருக்கு அத் துறையில் ஆர்வம் எற்பட்டு, எதிர்காலத்தில் மிகச் சிறந்த பொறியாளராகவோ அல்லது விஞ்ஞானியாகவோ கூட வர வாய்ப்புள்ளது. பெண் குழந்தைகளைத் தையல் பயிற்சிக்கு அனுப்புவதன் மூலம் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான ஆடைகளை அவர்களே தைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, அக்கம்பக்கத்தினருக்கும் தைத்துக் கொடுக்க வாய்ப்பளிக்கலாம். தன்னுயிரை மட்டுமின்றி, ஆபத்துக் காலங்களில் பிற உயிர்களையும் காக்க உதவும் நீச்சல் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள் பழுதுநீக்கும் பயிற்சி, தற்காப்பு கலைப் பயிற்சி மற்றும் மகளிருக்கான சமையல், கணிப்பொறி, தட்டச்சுப் பயிற்சி என கோடை காலப் பயிற்சிகள் ஏராளமாக உள்ளன. சிறு குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி, கணிதம், கையெழுத்துப் பயிற்சி என தினசரி 2 மணி நேரம் ஒதுக்கினாலே போதும், அவை அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நற்பயனை அளிக்கும். இவ்வாறு பல துறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் எத் துறையில் ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள் எனக் கண்டறிந்து, அவர்களை அத் துறையிலேயே ஈடுபடுத்தி வாழ்வை வளமாக்க முடியும். ஆனால், நாமோ நம் நேரத்தையெல்லாம், டி.வி. மற்றும் கணிப்பொறி முன் பலி கொடுத்துவிட்டு, ஓய்வு என்ற பெயரில் சோம்பேறியாக வாழவே நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறோம். நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் கூறியபடி, ஒரு மாணவன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் புத்தகப் படிப்பையும், 4 மணி நேரம் தொழில் படிப்பையும் பயில வேண்டும், அதுவே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். இல்லையில்லை! நாங்கள் கோடை விடுமுறைக்கு சுற்றுலாதான் செல்வோம் என்றாலும் தவறில்லை. ஆனால், அந்தச் சுற்றுலாவும் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். சுற்றுலா செல்லுமிடத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பற்றியோ, பழமையான கோவில்களைப் பற்றியோ குழந்தைகளுக்கு அக்கறையுடன் விவரியுங்கள். நமது நாட்டின் பாரம்பரியக் கலாசாரப் பெருமைகளை உணர்த்தும் இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள். மேற்கூறிய எதையும் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, முடிந்தால் உங்கள் உறவினர்களின் வீடுகளுக்காவது விடுமுறைக்குச் சென்று வாருங்கள். அப்போது தான் மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி என உறவுகளின் மகத்துவத்தைக் குழந்தைகள் உணர்வார்கள். வீணாக தொலைக்காட்சி, கணினி முன் அமர்ந்து மனதையும், வெயிலில் அலைந்து உடலையும் கெடுத்துக் கொள்ளாமல் விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாகப் பயன்படுத்திய திருப்தி நமக்குக் கிடைக்கும்.
Brliiiant thoughts. Nowadays students aré wasting a lot of time in watching money minded programs by The tv channels and cricket. To prepare for The competitive world they should be given more professional trainings and moral thoughts. Have a good luck.
ReplyDelete