Pages

Tuesday, April 2, 2013

விடைத்தாள் சேதத்துக்கு ரயில்வே பொறுப்பில்லை": பி.ஆர்.ஓ., விளக்கம்

"பத்தாம் வகுப்பு விடைத்தாள் பண்டல், ரயிலிலிருந்து விழுந்ததுக்கு ரயில்வே துறை காரணமில்லை" என, திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம், பி.முட்லூர் மையத்தில், கடந்த, 28ம் தேதி, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும், பி.முட்லூர் போஸ்ட் ஆபீஸ் மூலம், தஞ்சை மாவட்டம், நாடிமுத்து நகர் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாவட்டத்தின் பல்வேறு போஸ்ட் ஆபீஸ்களில் இருந்து அனுப்பப்பட்ட, 91 விடைத்தாள் பண்டல்கள், விருத்தாசலம் ரயில்வே மெயில் சர்வீஸ் - ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தலிருந்து, சென்னை - கும்பகோணம் செல்லும், "ராக்போர்ட்" எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பட்டது.

பார்சல்களை இறக்கிய போது, ஒரு பண்டல் குறைந்தது. விருத்தாசலம் ஜங்ஷனிலிருந்து ரயில் புறப்பட்ட, 300 மீட்டர் தூரத்தில், விடைத்தாள் பண்டல் ஒன்று முற்றிலும் சேதமடைந்து கிடந்தது. இது, கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு, "ரயில்வே துறையின் அலட்சியமே காரணம்" என, கூறப்பட்டது. தவிர, "விடைத்தாள்களை அலட்சியமாக கையாண்ட ரயில்வே துறை மீது வழக்கு தொடரப்படும்" என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன் கூறினார்.

இதுகுறித்து, திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் செய்தி தொடர்பாளர் கோபிநாத்தின் அறிக்கை: மார்ச், 28ம் தேதி நள்ளிரவு, ரயிலில் ஏற்றப்பட்ட, 10ம் வகுப்பு விடைத்தாள் அடங்கிய பார்சல் ஒன்று, விருத்தாசலம் பகுதியில் தவறி விழுந்து சேதமடைந்தது. இது, ரயில்வே துறையின் அலட்சியப் போக்கால் நடந்த சம்பவம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன; இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

கல்வித்துறை அதிகாரிகள், விடைத்தாள்கள் அடங்கிய பார்சலை, ஆர்.எம்.எஸ்.,சிடம் ஒப்படைத்திருந்தனர். அத்துறை, அஞ்சல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறை. அதற்கும், ரயில்வே துறைக்கும் தொடர்பில்லை.எனவே, ரயில்வே துறை தவறாக கையாண்டதால், விடைத்தாள்கள் சேதமடைந்தன என, கூறுவது தவறான தகவல்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.