Pages

Saturday, April 27, 2013

வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண், ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை : தமிழக அரசு பரிசீலனை

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். இதுகுறித்து நடந்த விவாதம்:-

ஏ.லாசர் (மார்க்சிஸ்ட்): ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு முறையை அமலுக்கு கொண்டு வரவேண்டும். மத்திய அரசு தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் ஆகியோருக்கு, தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தனித்தனி மதிப்பெண்களை தீர்மானித்துள்ளது.

ஆந்திரத்தில்கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகபட்ச இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர். அங்கு முற்பட்ட வகுப்பினருக்கு 60 சதவீத மதிப்பெண், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத மதிப்பெண், தாழ்த்தப்பட்டோர்- பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40 சதவீத மதிப்பெண் என தகுதி மதிப்பெண்கள் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆனால், தமிழகத்தில் அனைவருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் சாசன உரிமையான இட ஒதுக்கீடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன்: ஆசிரியர் தகுத்தேர்வு என்பது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு. ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனை பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனை பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

அ.சவுந்தரராசன் (மார்க்சிஸ்ட்): வேறு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு தகுதி மதிப்பெண்கள் குறைவாக உள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் நிர்ணயிக்கவேண்டும்.

தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும் அதிகமாக ஒருவர் பெற்றால் அவரை பொதுப்பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை.

அவரை இட ஒதுக்கீட்டிற்குள் வைக்காமல் பொதுப் பிரிவுக்கு கொண்டு சென்றால், இட ஒதுக்கீட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஒன்றிரண்டு இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

வங்கி போன்ற தேர்வுகளில் ஒதுக்கீட்டில் உள்ளவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றால் அவர்கள் ஒதுக்கீட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நடைமுறையை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்.

உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன்: இந்தப் பிரச்னை முதல்வரின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

1 comment:

  1. still we r waiting for pg homescience result.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.