Pages

Wednesday, April 17, 2013

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம் இழுபறி - நாளிதழ் செய்தி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அரசாணை வெளியிட்டும், தேர்வு பணிகள் துவங்குவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
அரசு கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 1,025 பணியிடங்களை நிரப்ப, 2011 செப்., 13ம் தேதியும், 68 பணியிடங்களை நிரப்ப, 2012 மார்ச், 5ம் தேதியும் அரசு அரசாணை வெளியிடப்பட்டது. போட்டி தேர்வுகள் மூலம் தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வாணையத்துக்கு, அரசு பரிந்துரை செய்தது.

பணி அனுபவத்துக்கு, அதிகபட்சமாக, 15 மதிப்பெண்கள், நேர்முக தேர்வுக்கு, 10 மதிப்பெண்கள், பிஎச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்கள் என, ஏற்கனவே இருந்த முறையை, அப்படியே பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், பிஎச்.டி., பட்டம் பெறாமல், எம்.பில்., பட்டத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் - நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்களும், முதுகலை பட்டத்துடன், தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 3 மதிப்பெண்களும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

புத்தகங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற துறை வெளியீடுகளில், கட்டுரை வெளியாகி இருந்தால், மதிப்பெண்கள் அளிப்பது நீக்கப்பட்டது. இதற்கான பரிந்துரையை, டி.ஆர்.பி.,க்கு, உயர்கல்வித் துறை அளித்துள்ளது. பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு, தேர்வு முறைக்கான, மதிப்பெண்கள் வழங்கும் முறைக்கு பரிந்துரை ஆகியவற்றை, அரசு வெளியிட்டும், ஒன்றரை ஆண்டுகளாக, கல்லூரி உதவி பேராசிரியர்கள் தேர்வுக்கு எந்த அறிவிப்பையும், டி.ஆர்.பி., இதுவரை, வெளியிடவில்லை.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலர் பிரதாபன் கூறுகையில், "உதவி பேராசிரியர் தேர்வு பணிகளை துவங்கினால் தான், வரும் கல்வியாண்டு துவக்கத்தில், பணியிடங்களை நிரப்ப முடியும். புதிதாக, 51 கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படுகின்றன. இதில், 827 புதிய உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவர்களுக்கான தேர்வுகளையும், இத்துடன் இணைத்து நடத்த வேண்டும்," என்றார்.

 கல்லூரி கல்வி இணை இயக்குனர் தேவதாஸ் கூறுகையில், "தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்," என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.