Pages

Monday, April 15, 2013

மலை கிராமப் பள்ளியைப் புறக்கணிக்கும் ஆசிரியர்கள்: மாணவர்களின் எதிர்காலம் - Dinamalar

மலை கிராமத்தில் உள்ள பள்ளிக்கு ஆசிரியர்கள் வர மறுப்பதால், அங்குள்ள மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் உள்ள மலை கிராமம் பெரியமலையூர். நத்தம்-செந்துறை சாலையில் உள்ள அய்யனார்புரம் பகுதியில் இறங்கி 7 கிலோ மீட்டர் தூரம் ஒத்தையடிப் பாதையில் நடந்து சென்றால், கரந்தமலையில் அமைந்துள்ள பெரியமலையூர் கிராமம் வருகிறது. இந்த கிராமத்துக்கு இரு சக்கர, 4 சக்கர வாகனங்களில் செல்ல முடியாது.
 இந்த கிராமத்தைச் சுற்றி, சிறியமலையூர், வலசை, பள்ளத்துக்காடு ஆகிய கிராமங்களும் உள்ளன. இந்த 4 கிராமங்களிலும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரியமலையூரில் மட்டும் சுமார் 1,200 பேர் வசிக்கின்றனர்.
 இந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பெரியமலையூரில் ஓர் அரசுப் பள்ளியும், வலசை மற்றும் சிறியமலையூரில் தலா ஒரு தனியார் பள்ளியும் உள்ளன.
பெரியமலையூரில் இருப்பது அரசு நடுநிலைப் பள்ளி. நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்ற பெயரில் செயல்படும் இந்தப் பள்ளியில் சுமார் 115 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆனால், அவர்களுக்குக் கற்றுத் தர ஆசிரியர்கள்தான் வருவதில்லை என்பதே அங்குள்ள மக்களின் ஒட்டுமொத்தப் புகார்.
தரத்தில் நடுநிலைப் பள்ளியாக இருந்தாலும், அந்தப் பள்ளி ஒரே அறையில்தான் செயல்படுகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும், அந்த அறையிலேயே அமர்ந்திருக்கின்றனர். பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் மற்றும் இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமையாசிரியராக இருக்கும் காந்திமதி பள்ளிக்கு வருவதேயில்லை என்றும், மற்ற ஆசிரியர்கள், தங்கள் விருப்பத்தின்பேரில், வாரத்தில் ஓரிரு நாள்களே வந்து செல்வர் என்றும், அப் பகுதியைச் சேர்ந்த ஜி.சின்ராசு, பி.முருகன், மு.சின்னன் ஆகியோர் தெரிவித்தனர். அந்த ஓரிரு நாளிலும் காலை 12 மணிக்கு பள்ளிக்குவரும் ஆசிரியர்கள், ஒருமணி நேரம் இருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி விடுவர். அரசு ஊதியம் பெறும் இவர்கள், பள்ளியில் பாடம் நடத்துவதே கிடையாது என்றும் தெரிவித்தனர்.
பள்ளியைத் திறந்துவைத்து, மாணவர்களை அமைதியாக அமரவைக்கும் பொறுப்புக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த வே.நாச்சம்மா என்பவரை தலைமையாசிரியை காந்திமதி நியமித்துள்ளதாகவும், அதற்காக ரூ.2 ஆயிரம் வரை அவருக்கு ஊதியமாக ஆசிரியர்களால் வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
 இதுகுறித்து அந்தப் பகுதியின் ஊராட்சித் துணைத் தலைவர் என். தங்கராஜ் தெரிவித்தது:
 அரசிடம் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மாதத்தில் 8 நாள்கள் (வாரத்தில் 2 நாள்) மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். சாலை வசதி இல்லாததால், தங்களால் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்துவர முடிவதில்லை என்பதே அவர்கள் கூறும் காரணம்.
 எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டுமானால், 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அடிவாரத்தில் உள்ள பள்ளிகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் நடக்கச் சிரமப்படுவதால், நத்தம், செந்துறை, கோபால்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளின் விடுதியிலும் தங்கிப் படிக்க வேண்டிய நிலையும் உள்ளது என்றார்.
 தலைமையாசிரியரால் நியமிக்கப்பட்ட நாச்சம்மா கூறியது:
 ஆசிரியர்கள் வரும்வரை நான்தான் பள்ளியைத் பார்த்துக் கொள்வேன். இதற்கு ஊதியமாக ரூ.2 ஆயிரம் கிடைக்கும். தலைமையாசிரியராக காந்திமதி என்பவரும், சிவக்குமார், முருகேசன் ஆகிய இரு ஆசிரியர்களும் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
 அங்குள்ள பொதுமக்கள் கூறும்போது, மலை கிராமத்தில் வந்து எந்த அதிகாரியும் சோதனை செய்ய மாட்டார் என்ற காரணத்தால், பெரும்பாலான நாள்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதே கிடையாது. நாங்கள்தாம் படிக்கவில்லை, எங்கள் பிள்ளைகளாவது படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால், தற்போது குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது என்றனர்.
 நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் கல்விக்காக நிதி ஒதுக்கீடுசெய்து, பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகின்றன. ஆனால், அந்த நோக்கம் இதுபோன்ற ஆசிரியர்களால் சிதைக்கப்படுகிறது.
 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பக் கூடாது, அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தும் அரசுகள், பள்ளிக்கு முறையாக வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறது என அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களான சி.பழனி, பி.பாக்யராஜ், எஸ்.முருகன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
 இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பா.சுகுமார் தேவதாசிடம் கேட்டபோது: கிராமங்களில் உள்ள மாணவர்களும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே, அரசு பள்ளிகளைக் கட்டி, ஆசிரியர்களையும் நியமித்து வருகிறது. ஆனால், சாலை வசதி இல்லை எனக் கூறி, பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கு எந்த ஆசிரியருக்கும் அனுமதி இல்லை.
 அதேபோல், அந்தந்த வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோரும் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தாம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ரகசியமாகச் சென்று, ஆசிரியர்கள் குறித்தும், பள்ளியின் தரம் குறித்தும் ஆய்வுகள் நடத்த வேண்டும்.
 பெரியமலையூர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களிடம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் விசாரணை நடத்தப்படும். பணிக்கு வராத நாள்களுக்கான ஊதியத்தைப் பிடித்தம்செய்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.