Pages

Friday, March 22, 2013

அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்

அரசுத் துறைகளில், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் நடராஜ் கூறினார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்காக, தேர்வாணையம் நடத்தும், துறைத் தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றால், சீனியாரிட்டிபடி, ஊழியர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கும்.

துறை தேர்வுகளுக்கான பாடத்திட்டம், 1990ல் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பின், 22 ஆண்டுகளுக்குப் பின், தற்போது மாற்றி அமைத்து, தேர்வாணையம் அறிவித்துள்ளது. போட்டித் தேர்வுகளைப் போலவே, துறை தேர்வு பாடத் திட்டங்களும், மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால், தேர்ச்சி சதவீதம் குறையுமா என, சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து, தேர்வாணைய முன்னாள் தலைவர் நடராஜ் கூறியதாவது: ஒவ்வொரு துறைகளிலும், பல மாற்றங்கள், நூற்றுக்கணக்கான புதிய அரசாணைகள், பல்வேறு புதிய திட்டங்கள் என, பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதுபோன்ற நிலையில், 20 ஆண்டுகளுக்கு முந்தைய திட்டங்கள், அரசாணைகள் அடிப்படையில், துறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்ததால், தேர்ச்சி சதவீதம், மிகக் குறைவாக, 12 என, இருந்தது. தற்போதைய திட்டங்களுக்கும், மாறுபாடுகளுக்கும் தகுந்தாற் போல், துறைத் தேர்வுகள் அமையாதது தான், தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு காரணம்.

மாற்றங்களுக்கு ஏற்ப, இப்போது புதிய தேர்வு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.வணிக வரித்துறையில், "வாட்" அமலுக்கு வந்துவிட்டது. அத்துறையில், பல்வேறு புதிய அரசாணைகள் அமலில் இருக்கின்றன. இவை எல்லாம், புதிய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

எனவே, புதிய பாடத் திட்டங்கள் மூலம், அரசு திட்டங்களை, அரசு ஊழியர், ஆசிரியர் நன்கு தெரிந்து கொள்ளவும், தேர்வில், அதிகளவில் தேர்ச்சி பெறவும், தற்போதைய பாடத் திட்டம் வழி வகுக்கும். இவ்வாறு, நடராஜ் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.