Pages

Saturday, March 16, 2013

பிப்ரவரி மாத சம்பளத்தை வழங்காததால் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி கூட்டத்தை ஆசிரியர்கள் புறக்கணிப்பு

பிப்ரவரி மாத சம்பளத்தை இன்னும் வழங்காததால் கடலூரில் நேற்று உதவி தொடக்கக்கல்வி அதிகாரி கூட்டிய கூட்டத்தை தலைமை ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 30, 31–ந்தேதிகளில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் கடலூர் வட்டாரத்தில் உள்ள 120 பள்ளிகளில் பணிபுரியும் 600 ஆசிரியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இன்னும் வழங்கப்பட வில்லை. இதனால் கடலூரில் கல்வித்துறை சார்பில் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைமை ஆசிரியர்கள், சம்பளத்தை ஏன் வழங்கவில்லையென்று உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பராங்குசனிடம் கேள்வி கேட்டனர், தலைமை ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அவர் கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டார். இதனால் தலைமை ஆசிரியர்களும் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியேறினார்கள்.

குற்றச்சாட்டு

இது பற்றி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் இளங்கோவன், தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் கூறியதாவது:–

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் காலதாமதமாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாத சம்பளத்தை 28–ந்தேதியே வழங்கியிருக்க வேண்டும், ஆனால் இதுநாள் வரை வழங்கவில்லை, இது பற்றி கேட்டதற்கு பதிலளிக்க முடியாமல் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பராங்குசன் வெளியே போய் விட்டார்.

கடலூர் உதவி தொடக்ககல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் அலட்சியப்போக்கால் தான் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் அங்கு முறைகேடுகளும் நடக்கிறது. உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, அங்கு 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். இது பற்றி மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதிகாரி பதில்

இது பற்றி உதவி தொடக்கக்கல்வி அதிகாரி திலகத்திடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:–

கடலூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தின் கீழ் 120 பள்ளிகள் உள்ளன. இதில் பணிபுரியும் 600 ஆசிரியர்களுக்கும் சம்பள பில் தயாரித்து சி.டி.யில் கருவூலத்துக்கு அனுப்பினோம், ஆனால் கருவூலத்தில் இருந்து தரப்பட்ட சாப்ட்வேர் சரியில்லாததால் மூன்று முறை திருப்பி அனுப்பி விட்டனர், இதனால் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு விட்டது, இன்னும் 4 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட்டுவிடும். உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறையும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.