Pages

Monday, March 18, 2013

மாநகராட்சி மாணவர்களுக்கு நற்பண்பு வகுப்புகள் - மோகனன்

சென்னை, எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இனிய மாலை நேரம். எட்டாம் வகுப்பு மாணவர்கள் அங்கே குழுமியிருந்தனர். நாம் சாப்பிடும் சாப்பாடு எப்படி நமக்கு கிடைக்கிறது என்பது ஆசிரியரின் கேள்வி. ‘அரிசியிலிருந்து’ என ஒரு மாணவன் சொல்ல, ‘மண்ணிலிருந்து’ என
மாணவி சொல்ல, நீர், காற்று, சூரிய ஒளி, உரம், செடி, விதை, விவசாயி என ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த பதில்களைச் சொன்னார்கள். நாம் ஓரிடத்தில் உட்கார்ந்து சாப்பிடும் சாப்பாட்டிற்கு எத்தனை பேர் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி உருவாகும் சாப்பாடு எப்படி எல்லாம் வீணாகிறது என மாணவர்களிடம் ஆசிரியர், கேள்விக்கணைகளைத் தொடுத்தார். கல்யாணத்தில், விருந்துகளில், வீட்டில் என பல பதில்கள் வருகின்றன. சரி, சாப்பாட்டை வீணாக்காமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்று கேட்க, தேவையான அளவு சமைக்கலாம், தேவையான அளவு மட்டும் தட்டில் இட்டு சாப்பிடுவேன், பகிர்ந்து உண்ணுவேன், கீழே சிந்தாமல் சாப்பிடுவேன் என்று மாணவர்கள் சொல்கிறார்கள். இதையெல்லாம் போர்டில் எழுதி வைத்து, அதை மாணவர்களைப் படிக்கச் சொன்னார் ஆசிரியர். இதுவரை நாம் பேசியதிலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள் என்கிறார் மீண்டும் ஆசிரியர். ‘உணவை வீணாக்கக் கூடாது. சிக்கனமாக இருக்க வேண்டும். மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணுவேன்’ என்பதை எல்லாம் கற்றுக் கொள்ளவில்லை. உணர்ந்து கொண்டோம் என்றனர்.

அட இந்த வகுப்பே வித்தியாசமா இருக்கே என்று கேட்டதற்கு, அந்த ஆசிரியர் அளித்த பதில் இன்னும் வித்தியாசமாக இருந்தது. மாணவர்களின் படிப்போடு நற்பண்பினை வளர்க்க, விஸ்வசேவா கல்வி அறக்கட்டளை, சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இதுபோல நற்பண்பு வகுப்புகளை நடத்துகிறது" என்கிறார், இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்.

புத்தகத்தில் உள்ளவற்றில் இருந்து கற்றுக்கொள்வது பள்ளிப் பாடம். எனக்குள் இருப்பவற்றை நானே உணர்ந்து என்னையே கற்றுக்கொள்ள வைப்பது இந்த நற்பண்பு பாடம்’ என்கிறார், மாணவர் அருணாசலம். எனக்கு ரொம்ப கோவம் வரும் சார். வீட்லயும் சரி, ஸ்கூல்லயும் சரி என் கோபத்தைக் காட்டிடுவேன். இந்த வகுப்புக்கு வந்ததிலருந்து கோபம் குறைஞ்சிடுச்சு. பிரெண்ட்ஸ்ங்க அதிகமாயிட்டாங்க. நல்லா படிக்கவும் செய்யறேன்" என்கிறாள், மாணவி வர்ஷா.

உண்மையிலேயே சொல்லப்போனால், இந்த வகுப்பால் முதலில் பண்பட்டது நான்தான். எனது கோபங்கள் குறைந்துபோனது" என்றார், இப்பள்ளியில் நற்பண்பு வகுப்பை நடத்தி வரும் பகுதிநேர ஓவிய ஆசிரியை மோகனா. இந்த நற்பண்பு வகுப்பின் சிறப்பே அவர்களுக்கு நாம் ஏதும் கற்பிக்காமல், அவர்களின் மனதில் உள்ள பண்புகளை வெளியே கொணர்வதுதான். கேள்வி கேட்பதன் மூலம் அவர்களின் தரப்புப் பதில்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளும் பண்பு, உண்மையை உரக்கச் சொல்லும் பண்பு ஆகியவை வளர்ந்துள்ளன. கூட்டு முயற்சி, குழு விவாதம், உண்மையாய் இருத்தல் போன்ற நற்பண்புகள் எங்கள் மாணவர்களிடையே வளர்ந்துள்ளன" என்கிறார், விருகம்பாக்கம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நற்பண்பு வகுப்புகளை நடத்தி வரும் பகுதி நேர இசை ஆசிரியை சுபஸ்ரீ.

சென்னை மாநகராட்சியில் உள்ள 286 பள்ளிகளில் தற்போது 55 பள்ளிகளில் உள்ள, 6,7,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வாரம் ஒரு முறை நற்பண்பு வகுப்புகளை, மாநகராட்சியின் அனுமதியோடு நடத்தி வருகிறோம். மேலும் 100 மாநகராட்சிப் பள்ளிகளில் நற்பண்பு வகுப்புகளை நடத்த அனுமதி தந்துள்ளார் மேயர் சைதை துரைசாமி" என்கிறார், இந்த அமைப்பில் பயிற்சியாளராக இருக்கும் பாலாஜி.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.