Pages

Thursday, March 14, 2013

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் நேர்மையாக நடக்கும்: புதிய தலைவர்

"டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள், நேர்மையாக நடக்கும்; இதுகுறித்து, யாரும் பயப்பட வேண்டாம்" என, தேர்வாணையத்தின் புதிய தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.
தமிழக அரசின், அட்வகேட் ஜெனரல் பதவியில் இருந்த நவநீதகிருஷ்ணன், தேர்வாணையத்தின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம், தலைவர் பதவியில் இருந்து, நட்ராஜ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நேற்று காலை, 10:30 மணிக்கு, தேர்வாணையத்தின் புதிய தலைவராக, நவநீதகிருஷ்ணன் பதவி ஏற்றார்.

இவரது தந்தை அப்பாசாமி, தாயார் இந்திராணி ஆகியோர், மகனை ஆசிர்வாதம் செய்து, தலைவர் நாற்காலியில் அமர வைத்தனர். பின், நவநீதகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:

எனக்கு, இந்தப் பதவியை வழங்கிய, முதல்வருக்கு, முதலில் நன்றி. டி.என்.பி.எஸ்.சி., பழமையான, பாரம்பரியம்மிக்க ஒரு அமைப்பு. இது, மிக சிறப்பாக இயங்கி வருகிறது. மேலும், சிறப்பாக செயல்பட, நான் பாடுபடுவேன்.

புதிய முன்னேற்றங்களுக்கு, வழிவகை செய்யப்படும். தகுதியானவர்கள், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். அனைத்து தேர்வுகளும், நேர்மையாக நடக்கும்; இது குறித்து, யாரும் பயப்பட வேண்டாம். தேர்வாணையத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி, நிர்வாகம் சிறப்பாக செயல்பட, நடவடிக்கை எடுப்பேன்.

அரசுத் துறைகளில், காலியாக உள்ள இடங்களைப் பெற்று, உடனுக்குடன் தேர்வை நடத்தி, முடிவுகளை வெளியிடவும், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.