மின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசின், 103 மாணவர் விடுதிகளில், சூரிய சக்தி மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து, ஐந்தாண்டுகள் பராமரித்து, மின் உற்பத்தி செய்யும் வகையில், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளன.
தமிழகத்தின் மின் தேவையில், 4,000 மெகா வாட், பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில், மின் வெட்டு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. மின் பற்றாக்குறையை சரிகட்ட, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில், சூரிய சக்தி மின் உற்பத்திக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அரசு அலுவலகங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க, கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு, முதல்வர் மற்றும் கவர்னர் அலுவலங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன், அடுத்த கட்டமாக, அரசின் மாணவர் விடுதிகளில், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில், மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் இஸ்லாமிய பெண்கள் விடுதிகள் உள்ளன.
இவற்றில், மாணவர்கள் இலவசமாக தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதிகளின் மின் தேவையை பூர்த்தி செய்வதில், பெரும் சிக்கல் நிலவுகிறது. தொடர் மின்வெட்டு காரணமாக, மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
எனவே, மாநிலத்தில் உள்ள, அரசின், 103 மாணவர் விடுதிகளில், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடுதியிலும், 1,000 வாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் வகையில், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டம், செம்மந்தலம் பகுதியில் உள்ள மாணவர் விடுதியில், முன்னோட்டமாக அமைக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி நிலையம், நல்ல பலன் கிடைத்ததைத் தொடர்ந்து, மற்ற மாணவர் விடுதிகளில், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
மாணவர் விடுதிகளில் அமைக்கப்படும், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை, ஐந்தாண்டுகளுக்கு பராமரித்து, மின் உற்பத்தியை மேற்கொள்ளும் பணியை, உற்பத்தி நிலையங்களை அமைக்கும் நிறுவனங்களே செய்யவேண்டும் என்ற அடிப்படையில், பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில், ஒரு பகுதியாக, மாணவர் விடுதிகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் முடிந்து, வரும் கல்வியாண்டு முதல், மாணவர் விடுதிகளுக்கு, சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.