Pages

Wednesday, March 27, 2013

அறியாமை இருள் அகற்றி, ஒளி ஏற்றும் வழிகாட்டி: மாணவர்கள், பெற்றோர் பெருமிதம்

மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்து வரும், பிளஸ் 2 மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் காட்டும், வழிகாட்டி நிகழ்ச்சிக்கு, இரண்டாம் நாளான நேற்றும், மாணவர்கள் குவிந்தனர். காலை முதல் இரவு வரை
கருத்தரங்கு மற்றும் ஸ்டால்களை மொய்த்த மாணவர்கள், இந்நிகழ்ச்சி அறியாமை இருளை அகற்றி, அருமையான எதிர்காலத்திற்கு ஒளி விளக்காய் இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.

அவர்கள் கூறியது: கே.ராஜபிரியா, மதுரை: பிளஸ் 2 வில், 1150 மதிப்பெண் எதிர்பார்க்கிறேன். தகவல் தொழில்நுட்பத்தில் இன்ஜினியரிங் படிக்க நினைக்கிறேன். அதுபற்றிய விபரங்களை, வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் அறிந்து கொண்டேன். கவுன்சிலிங் மூலம் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும் என, நினைக்கிறேன்.

பல்வேறு கல்லூரிகள் பற்றியும், கட்டண விபரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள முடிந்தது. கருத்தரங்கு மூலம் பல்வேறு படிப்புகள் பற்றிய தகவல்கள் கிடைத்தன. இவற்றை எனது தோழிகளுடனும் பகிர்ந்துகொள்ள, எனக்கு நல்ல வாய்ப்பு.

எஸ்.ஜெகன், மதுரை: எதிர்காலத்தில் ஏராநாட்டிகல் இன்ஜினியரிங் படிக்க ஆசை. இது பற்றியும் வழிகாட்டி கருத்தரங்கில், நிபுணர்கள் பேச இருக்கின்றனர் என, அறிந்து கொண்டேன். மற்ற இடங்களில் கிடைக்காத இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்வேன்.

தினமலர் மூலம் இந்நிகழ்ச்சி பற்றி அறிந்து, நிறைய நண்பர்களையும் அழைத்து வந்துள்ளேன். இன்று ஒரு நாள் எனக்கு போதவில்லை. நாளையும் வந்து, முழுவதும் ஸ்டால்களை சுற்றிப் பார்க்கப் போகிறேன்.

எம்.பாண்டியம்மாள் 44, மானாமதுரை: எனது மகளை வழிகாட்டிக்கு அழைத்து வந்துள்ளேன். மருத்துவம் அல்லது ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறார். இங்கு வருவதற்கு முன், உயர்கல்வி பற்றி நிறைய சந்தேகங்கள் இருந்தன. அவை அனைத்தும் வழிகாட்டிக்கு வந்த பிறகு தீர்ந்து விட்டன.

மூன்று ஆண்டுகளுக்கு முன், எனது மூத்த மகளை வழிகாட்டிக்கு அழைத்து வந்தேன். அப்போதும் பயனுள்ளதாக இருந்தது; இப்போது அடுத்த மகளையும் அழைத்து வந்துள்ளேன்.

கணேஷ், மதுரை: நான் ஆசிரியராக இருக்கிறேன். தினமலர் நாளிதழ் பார்த்து, இந்நிகழ்ச்சிக்கு எனது மகளை அழைத்து வந்தேன். எதிர்கால திட்டமிடலுக்கு, இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக, இங்கு வழங்கிய வழிகாட்டி புத்தகம், பல தகவல்களை எங்களுக்கு தருகிறது. கல்லூரிகளில், என்னென்ன வசதிகள் உள்ளன; வேலைவாய்ப்பு எப்படி என விளக்குகின்றனர்.

பி.என்.சங்கமி, திருநகர்: ஆர்க்கிடெக்சர் படிக்க விரும்புகிறேன். எனது சகோதரியும் அதைத்தான் படித்தார். அதுவே எனக்கு, "இன்ஸ்பிரேஷன்" ஆகி விட்டது. வழிகாட்டிக்கு வந்த பின் தான், அந்த படிப்பு எங்கெங்கு இருக்கிறது, எதிர்காலம் எப்படி? போன்ற விபரங்களை அறிந்து கொண்டேன். எனது தோழிகளையும் அழைத்து வந்துள்ளேன். தினமலர் நாளிதழ் பார்த்து எனது அம்மா சொன்னதும், இங்கு வந்து விட்டேன்.

வி.கார்த்திகாதேவி, விருதுநகர்: பி.டெக்., ஐ.டி., படிக்கலாம் என எண்ணியுள்ளேன். நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் எனது விருப்பம். தேர்வில், 1100 மதிப்பெண் எதிர்பார்க்கிறேன். தினமலர் நாளிதழ் மூலம் வழிகாட்டி பற்றி அறிந்து, கல்லூரிகள் கண்காட்சியை காண்பதற்காகவே, விருதுநகரில் இருந்து பெற்றோருடன் வந்தேன்.

நமது பகுதியில் இவ்வளவு கல்லூரிகள் இருக்கின்றனவா? என. இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது. இதுவே பெரிய ஆச்சரியமாக அமைந்தது. எங்களுக்கு தெரியாத நிறைய படிப்புகள் இருப்பதும், இப்போதுதான் தெரிகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.