Pages

Monday, March 11, 2013

முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடாததால் பெற்றோர் கவலை

பெரும்பாலான மாவட்டங்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தவிர்த்து, இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படவில்லை. இதனால், கோடை விடுமுறைக்கு, வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பெற்றோர், கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போது, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 1 முதல் 9 மற்றும், பிளஸ் 1 வகுப்புகளுக்கான, முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை, பல மாவட்டங்களில் வெளியிடப்படவில்லை. தேர்வு அட்டவணையை விரைந்து வெளியிட்டால், வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பெற்றோருக்கு, உதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான அட்டவணை, ஏப்ரல், 3ல் துவங்கி, 18 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எனினும், இன்னும் பள்ளிகளுக்கு, அட்டவணை சென்றடையவில்லை.

தனியார் பள்ளிகளுக்கான அட்டவணையை, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் தெரிவிக்க வேண்டும். ஆனால், இதுவரை, அட்டவணை வரவில்லை என, பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும், அட்டவணை அறிவிக்கப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், முழு ஆண்டு தேர்வு அட்டவணை, மாணவர்களுக்கு, அறிவிக்கப்படாத நிலைமை உள்ளது.

சென்னை, வடபழனியைச் சேர்ந்த பெற்றோர் சீனிவாசன் கூறுகையில், "தேர்வு அட்டவணையை முன்கூட்டியே வெளியிட்டால், மாணவ, மாணவியர், அதற்கேற்ப தேர்வுக்கு தயாராக முடியும். பெற்றோர் மட்டுமில்லாமல், ஆசிரியர்களும், வெளியூர் செல்வதற்கு ஏற்ப, பயண திட்டத்தை வகுக்க முடியும். அட்டவணையை விரைந்து வெளியிட, கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.