Pages

Thursday, March 21, 2013

ஆங்கிலத்தில் பேசி அசத்தும் கிராமத்து பள்ளி மாணவர்கள்

சிவகங்கை அருகே மரக்காத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்துவது, அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம், மரக்காத்தூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு மரக்காத்தூர், நற்கனி, புலியூரணி, மணியன்குடி, சிவந்தரேந்தல், அந்தரேந்தல், குருமனேந்தல் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பெஞ்சமின், 38, முயற்சியால், மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசி, அசத்துகின்றனர். இவர், தமது சொந்த முயற்சியால், 5 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு , காலை 8.30 முதல் 9.15 மணி வரை, ஆங்கிலத்தில் படித்தல், பேசுதல், இலக்கண பயிற்சி அளிக்கிறார். இப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் சுயநடையில், ஐந்து வரிக்கு மிகாமல், பிழையின்றி ஆங்கிலம் எழுதுவர். இது தவிர வாசிப்பு, இலக்கண பயிற்சியும் அளிக்கிறார். பள்ளி விழாக்களின் போதும், மாணவர்களுக்கு ஆங்கில உரையாடல் மூலம் பட்டிமன்றம், நாடகம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் பங்கேற்று, சரளமாக ஆங்கிலம் பேசுவது, அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்துகிறது. மாணவர்கள் அனைவரும், பாட நேரங்கள் தவிர்த்து, பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் உரையாடுவது தான் சிறப்பு. மேலும், "நண்பர்கள் குழு' மூலம் விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு சென்று, சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.

எட்டாம் வகுப்பு மாணவன் மணிகண்டன் கூறுகையில், ""ஆரம்பத்தில் ஆங்கிலம் சற்று கடினமாக தான் இருந்தது. ஆசிரியர் தந்த ஊக்கத்தால், ஆங்கிலம் கற்பது, பேசுவது எளிமையானது, '' என்றார்.

ஆசிரியர் பெஞ்சமின் கூறுகையில்,""அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகள், சின்ன வாக்கியங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வந்தேன். தினமும் மாணவர்களுக்கு வாசிப்பு திறன், எழுத்து, இலக்கண பயிற்சி தருகிறேன். ஆங்கிலம் அந்நியமொழி என்ற எண்ணம் வரக்கூடாது. தயக்கமில்லாமல் பேசவேண்டும், தவறாக பேசுகிறோம் என கூச்சப்படவேண்டாம் என வலியுறுத்துவேன்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.