Pages

Sunday, March 17, 2013

இயற்பியல் வினாத்தாள் அவுட்?: கல்வித்துறையினர் ரகசிய விசாரணை - நாளிதழ் செய்தி

துறையூர் பள்ளியில், தேர்வு நேரத்துக்கு முன், வினாத்தாளை திறந்து பார்த்து, அதற்கான விடைகளை மாணவியருக்கு வழங்கிய தேர்வு கண்காணிப்பாளரிடம், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக, தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்டம், கோட்டப்பாளையம், புனித லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மரியா; துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு கண்காணிப்பாளராக, பணி அமர்த்தப்பட்டுள்ளார். இப்பள்ளியிலிருந்து தான், துறையூர் வட்டாரத்தில் உள்ள, ஒன்பது தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பப்படும்.

இப்பள்ளியின், தேர்வு மைய கண்காணிப்பாளராக, துறையூர் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பிளேக் சாலமன் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு நாளன்று, 9:00 மணிக்கு, தேர்வு கண்காணிப்பாளர் மூலம் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பப்பட்டு, 9:40 மணிக்கு தேர்வு எழுதும் அறைக்கு வழங்கப்படும்.

கடந்த, 11ம் தேதி, பிளஸ் 2 இயற்பியல் தேர்வு அன்று, வழக்கமான நேரத்துக்கு முன், 9:10 மணிக்கு வினாத்தாளை திறந்து பார்த்து, தலைமை ஆசிரியர் மரியா, மொபைல்போனில், தன் பள்ளி தேர்வு கண்காணிப்பாளர் பிளேக் சாலமன் சந்திரசேகரிடம் வினாக்களை கூறி, விடைகளை தயாரித்து மாணவியருக்கு வழங்கும்படி, கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

அதன்படி, பள்ளி வளாகத்தில் இருந்த விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர்களிடம் வினாக்களை தந்து, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை தயாரித்து, ஆசிரியர்கள் மூலம் தாளில் எழுதியும், வாய் மொழியாகவும் மாணவியருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி ஒருவர், ஆசிரியரிடம் கேட்ட போது, மாணவியை அவர் கண்டித்தார். அந்த மாணவி, தன் தந்தையிடம் இதுகுறித்து தெரிவிக்கவே, அவர், முசிறி மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் செய்தார்.

மாவட்ட கல்வி அலுவலர், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்தார். இருவரும் விசாரித்து, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் கார்மேகத்திடம் அறிக்கை கொடுத்துள்ளனர்.

முசிறி மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தின் கூறுகையில், "முற்றிலும் தவறான தகவல். அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. வேண்டுமென்றே சிலர் புரளி பரப்புகின்றனர்" என்றார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் கூறுகையில், "சரியாக தேர்வு எழுதாத ஒரு மாணவி, தன் தந்தையிடம் கூறியுள்ளார். எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுப்பதாக கூறினேன்; அவர் புகார் கொடுக்கவில்லை. வேண்டுமென்றே பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.