Pages

Friday, March 1, 2013

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மிளிரும் அரசு தொடக்க பள்ளி

அரசு தொடக்கப் பள்ளியில் சிறப்பான கட்டட வசதிகள், சுற்றுச்சூழல் என, தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளுடன் மிளிர்கிறது. தனியார் பள்ளிகளில் கூடுதல் வசதிகள் உள்ளன என்பதால், கிராமப் பகுதிகளிலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
அனைவருக்கும் கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ், மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக, பள்ளிகளில் கட்டடம், கற்றல், கற்பித்தல் தொடர்பான உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சுந்தரராஜபுரம் அரசு தொடக்கப் பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, மொத்தம், 28 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒருங்கிணைந்த பள்ளிகள் பராமரிப்பு திட்டத்தின்கீழ், 1.80 லட்சம் ரூபாய் செலவில் கழிப்பறை சீரமைப்பு, வகுப்பறைகளுக்கு "டைல்ஸ்' பதித்தல், மேல்தளத்திற்கு குளிர்ச்சி தரும் ஓடுகள் பதித்தல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அரசுப் பள்ளிகள் என்றாலே புதர் மண்டிக் கிடப்பதும், கட்டடங்கள் சீரமைக்கப்படாமல் இருப்பதும், பல இடங்களில் காணப்படும் பொதுவான காட்சி. இந்நிலையில், இப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக புதுப்பொலிவுடன் மிளிர்வது ஒரு நல்ல முன் உதாரணம். மாணவர்களுடன் தரையில் அமர்ந்து, பாடம் நடத்திக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் சேகர் கூறுகையில், ""மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் கல்வி ஆண்டில் மாணவர் எண்ணிக்கை கூடும் என, எதிர்பார்க்கிறோம்'' என்றார். அசத்தும் அங்கன்வாடி தொடக்கப் பள்ளியை போன்று, அங்கன்வாடியும் சீரமைக்கப்பட்டு "டைல்ஸ்' பதிக்கப்பட்டுள்ளது. இங்கு, 25 குழந்தைகள் படிக்கின்றனர். குடிநீர் வசதி, புத்தகங்கள் என சிறந்த கட்டமைப்புடன் விளங்குகிறது.
ஆனால், உதவியாளர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால், குழந்தைகளை
ஆசிரியர் ஒருவரே பராமரிக்க வேண்டியுள்ளது. அதேபோல், மின் இணைப்பு வழங்கப்படாததால், மின்விளக்கு வசதி இன்றி குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.