Pages

Friday, March 15, 2013

பிளஸ் 2 கணிதத் தேர்வு கடினம்; மாணவர்கள், ஆசிரியர்கள் கவலை

பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர்.
இதனால், கணிதத்தில், நூற்றுக்கு நூறு எடுப்பவர்கள் எண்ணிக்கை சரிவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும், கணித ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மிகவும் முக்கியமான கணிதம், விலங்கியல் தேர்வுகள், நேற்று நடந்தன. பொறியியல், சீட் கிடைக்க, கணிதத்தில் பெறும் மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். கட்-ஆப் மதிப்பெண்களில், 0.25, 0.5 மதிப்பெண்கள் குறைந்தால் கூட, பல ஆயிரம் மாணவர்களை விட, பின்னுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இதுவரை நடந்த தேர்வுகள், எளிதாக இருந்ததாக, மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, ஆறு மதிப்பெண் மற்றும், 10 மதிப்பெண் கேள்விகள், கடினமாகவும், எதிர்பார்க்காததாகவும் அமைந்து இருந்ததாக, மாணவ, மாணவியர், அதிர்ச்சியுடன் கூறினர்.

ஆறு மதிப்பெண் பகுதியில், 12 கேள்விகள் தரப்பட்டு, அதில், 10 கேள்விகளுக்கு, விடை அளிக்க வேண்டும். இதில், 55வது கேள்வி, கட்டாய கேள்வி. இதற்கு, விடை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆறு மதிப்பெண், கட் ஆகிவிடும். இந்த கேள்வி, மிக கடினமாக இருந்ததாக, சென்னை மாணவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல், 10 மதிப்பெண் பகுதியில், 70வது கேள்வி, கட்டாய கேள்வி. இந்த கேள்வி, இதுவரை, கேட்கப்பட்டதே கிடையாது என்பதால், பெரும்பாலான ஆசிரியர்கள், இந்த பகுதியை நடத்துவது கிடையாது என, கணித பாட ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால், இந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல், மாணவர்கள் திணறினர்.

இதுகுறித்து, கணித பாட ஆசிரியர்கள் இருவர், மேலும் கூறியதாவது: "வகை நுண்கணிதம் பயன்பாடுகள்" என்ற பாடத்தில் இருந்து தான், ஆறு மதிப்பெண்களுக்கான கட்டாய கேள்வியும், 10 மதிப்பெண்களுக்கான, கட்டாய கேள்வியும் கேட்கப்பட்டுள்ளன.

10 மதிப்பெண்களுக்கான கேள்வி, முதலில், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. பின், பாடத் திட்டங்களை மாற்றி அமைத்தபோது, இந்த பகுதியை சேர்த்துவிட்டனர். பாடத்திட்டம், அறிமுகப்படுத்தப்பட்ட, 2006ல் இருந்து, இந்த கேள்வியை கேட்டதே கிடையாது. இப்போது, திடீரென கேட்டதால், மாணவர்கள் திணறிவிட்டனர்.

பல மையங்களில், இந்த கேள்விக்கு, மாணவர்கள், விடை எழுதவில்லை என்பது, உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. ஆறு மதிப்பெண் பகுதியில், இடம்பெற்ற 49, 50வது கேள்விகள் கூட, யாருமே எதிர்பார்க்காதது தான். மொத்தத்தில், 200க்கு 200 எடுக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, கண்டிப்பாக சரிவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பாடத்தில், தோல்வி அதிகம் இருக்காது. இவ்வாறு, கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கடந்த, 2011ல், 2,720 பேர், கணிதத்தில், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு, 2,656 என, குறைந்தது. இந்த ஆண்டு, நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவோர் எண்ணிக்கை மேலும் சரியும் அபாயம் எழுந்து உள்ளது. கணிதத்தில், சென்டம் சரிவு ஏற்பட்டால், பொறியியல் கட்-ஆப் மதிப்பெண்கள், கணிசமாக குறையும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.