Pages

Tuesday, March 19, 2013

ஸ்ரீரங்கத்தில் 128 கோடியில் ஐ.ஐ.ஐ.டி. : முதல்வர் அறிவிப்பு

திருச்சி, ஸ்ரீரங்கத்தில், 128 கோடி ரூபாய் செலவில், புதிதாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் செய்திக்குறிப்பு: தமிழக அரசு, கடந்தாண்டு, 11 பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டன. நடப்பாண்டு, மூன்று பொறியியல் கல்லூரிகள், 10 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 11 பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மாணவர்களும் உலகத் தரத்திற்கு ஏற்ப, தொழில்நுட்ப கல்வி பெற வசதியாக, ஸ்ரீரங்கத்தில், புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும். இந்நிறுவனம், மாநில, மத்திய மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் படி, 128 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

ஸ்ரீரங்கம், சேதுராப்பட்டியில், 56.37 ஏக்கரில், ஐ.ஐ.ஐ.டி., அமைக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி, இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்திற்கான கட்டடங்கள் கட்டும் வரை, திருவெறும்பூரில் உள்ள பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில், தற்காலிகமாக, 2013-14ம் கல்வியாண்டு முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இயங்கும்.

தேனி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில், புதிதாக ஏழு பல தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டன. இந்த கல்லூரிகளுக்கு, சுற்றுசுவர் மற்றும் அணுகுசாலை வசதிகள் அமைக்க, ஒவ்வொரு கல்லூரிகளுக்கும், 31 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம், 2.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.