Pages

Friday, February 1, 2013

தேர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்படும் அபாயம்

அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் சார்பில், பிப்ரவரி மாதத்தில், ஆசிரியர்களுக்கு தொடர்ந்து, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதனால், நடப்பு கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்ககமும்; ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககமும்; கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ், ஆண்டுக்கு, 15 நாள் வரை, அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும்.மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்த்து இருந்ததால், நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் தருணத்தில், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மாணவர்களின் விவரங்களை, "ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்யும் பணிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஒன்றிரண்டு ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், பிப்., 4 முதல், 6ம் தேதி வரை, இயலாக் குழந்தைகளுக்கான கல்வி முறை குறித்த பயிற்சியும்; பிப்., 4 முதல், 7ம் தேதி வரை, கணிதப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் மூலம்,பாடவாரியாக,பிப்., 4ம் தேதியில் இருந்து, 22ம் தேதி வரை, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சிக்கும், பள்ளியிலிருந்தும் குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களாவது பங்கேற்க வேண்டியுள்ளது.எனவே, பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை உருவாகி, தேர்வு நேரத்தில் மாணவர்கள் தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் சரியவும் வாய்ப்பிருப்பதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:கல்வியாண்டின் இறுதியில், பாடம் நடத்துவது குறித்து பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் எந்த அளவுக்கு பயன் பெறுவர் என்பது தெரியவில்லை.தேர்வுக்கு மாணவனை தயார்படுத்த வேண்டிய நிலையில், ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுவதால்,பள்ளிகளில் ஒன்றிரண்டு ஆசிரியர் இருப்பதே, அரிதாக உள்ளது. நடப்பாண்டில், மாணவர்களின் விவரங்களை "ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்யும் பணியும் சேர்ந்து கொண்டதால், அனைத்து பள்ளிகளிலும் இதே நிலை நீடிக்கிறது.சமச்சீர் கல்வியில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறை தேர்வு உள்ளதால், செய்முறை பயிற்சி எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.