Pages

Saturday, February 23, 2013

தனியார் பள்ளி கட்டணம் வசூல் புகார் தெரிவிக்க கல்வி அதிகாரி தலைமையில் சட்டப்பூர்வ குழு

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் சட்டப் பூர்வ குழுக்களை அரசு அமைத்துள்ளது.
தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த கடந்த 2009ம் ஆண்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 2010ம் ஆண்டில் தனியார் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, அந்தந்த பள்ளிகளின் வரவு செலவுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்தது. குழு நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும்,

கட்டணம் குறித்த விவரங்களை தகவல் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளி கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால், தனியார் பள்ளிகளில் அந்த கட்டணங்களை வசூலிப்பதாக கூறினாலும், வெவ்வேறு வகையான வசதிகளை காட்டி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். இது குறித்து அவ்வப்போது கட்டண குழுவிடம் பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கட்டண குழுவிடம் நேரில் வந்து புகார் தெரிவிக்க பெற்றோர் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை.

மேலும், பெற்றோர் சங்கங்களும் ஒன்று திரண்டு, சில கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தன. அதில் ஒன்று, மாவட்ட வாரியாக புகார் தெரிவிக்கும் பிரிவுகளை தொடங்க வேண்டும் என்பது. இதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு தனியார் பள்ளிகள் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி சட்டப் பூர்வமான குழுக்களை அமைக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை தலைவர்களாக கொண்டு இந்த குழுக்கள் செயல் படும். அந்த குழுவில் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ), மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் (ஐஎம்எஸ்), மாவட்ட தலைமை இடத்தில் செயல்படும் ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட தலைநகரில் செயல்படும் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட 7 பேரை உள்ளடக்கி அந்தந்த மாவட்டத்தில் குழுக்கள் செயல்படும். ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3ம் சனிக்கிழமைகளில் இந்த குழுவிடம் புகார் தெரிவிக்கலாம்.

தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்த புகார்களை பெற்றோர் மேற்கண்ட குழுவின் தலைவராக உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கொடுக்க வேண்டும். பெறப்படும் புகார்களின் பேரில் சம்மன் அனுப்பி குறிப்பிட்ட பள்ளி முதல் வர் மற்றும் பெற்றோர் என இரு தரப்பினரிடமும் விசாரித்து, அதன் அறிக்கையை சென்னையில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் அதன் மீது கட்டணக் குழு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.