Pages

Wednesday, February 13, 2013

பணப்பலன் கிடைக்காமல் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் அவதி

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த, 433 முதுகலை ஆசிரியர்களை, கோர்ட் உத்தரவிட்டும், பணிவரன் முறை செய்யாமலும், உரிய பணப் பலன்களை வழங்காமலும், பள்ளி கல்வித்துறை, பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.
கடந்த, 1978களில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் தேவை அதிகமாக இருந்தது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில், எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., ஆகிய, முதுகலை பட்டப் படிப்பு படித்த, 433 பேர், தொகுப்பூதிய அடிப்படையில், முதுகலை ஆசிரியர்களாக, பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்கள், அந்த காலத்தில் இருந்த, பி.டி., படிப்பையோ, அதன்பின் அறிமுகமான, பி.எட்., படிப்பையோ படிக்கவில்லை. இந்த காரணத்தை காட்டி, 433 பேரையும், பணிவரன் முறை செய்ய, பள்ளி கல்வித்துறை மறுத்து விட்டது. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், சென்னை ஐகோர்ட் முதல், சுப்ரீம் கோர்ட் வரை, பல்வேறு வழக்குகள் தொடர்ந்ததில், அவர்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்தன.

கோர்ட் உத்தரவின்படி, 433 பேரையும், பணி வரன்முறை செய்து, டி.என்.பி.எஸ்.சி., ஒப்புதல் அளித்துள்ளது. இருந்தும், குறிப்பிட்ட சில பேரை மட்டும், பணி வரன்முறை செய்துவிட்டு, பெரும்பாலானவர்களை, பணிவரன் முறை செய்யாமலும், உரிய பணப்பலன்களை வழங்காமலும், பள்ளி கல்வித்துறை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வருவதாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர் அமைப்பின் தலைவர் பரமசிவம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது: அந்தக் காலத்தில், பட்டப் படிப்புகளை படித்தவர்களை, வலுக்கட்டாயப்படுத்தி, ஆசிரியர் வேலை கொடுத்தனர். அப்படி நியமனமானவர்கள் தான் நாங்கள்.

பல ஆண்டுகளாக போராடி, பணிவரன்முறை உத்தரவை பெற்றோம். ஆனால், அரசு உத்தரவை, கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளி கல்வித்துறை, காலம் தாழ்த்தி வருகிறது. எங்களில், பல ஆசிரியர்கள் இறந்துவிட்டனர். கடைசி காலம் வரை, வெறும் 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன், வாழ்க்கை முடிந்துவிட்டது.

பணிவரன் முறை செய்து உத்தரவிட்டால், உரிய பணப்பலன்கள் கிடைக்கும். ஆனால், கல்வித்துறை அதிகாரிகள், என்ன காரணத்தினாலோ, கோர்ட் உத்தரவை அமல்படுத்த மறுக்கின்றனர். அதிகாரிகளிடம் கேட்டால், உரிய பதில் கிடைப்பதில்லை.எங்களது பிரச்னைகளை தீர்க்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பரமசிவம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.