Pages

Monday, February 25, 2013

ஆறே மாதத்தில் பி.எட்., பட்டம் : பெரியார் பல்கலை பட்டத்தை நிராகரித்தது டி.ஆர்.பி.,

சேலம் பெரியார் பல்கலையில், ஆறே மாதத்தில் வழங்கப்பட்ட பி.எட்., பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்து, வேலைவாய்ப்பை மறுத்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், நேற்று, பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர்.
சேலம் பெரியார் பல்கலையில், 2008ம் ஆண்டுக்கு முன் வரை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. 2008ம் ஆண்டு, கல்வியியல் பல்கலை துவக்கப்பட்டு, அதில் கல்வியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டன. கல்வியியல் பல்கலை அறிவிப்பு வரும் நேரத்தில், 2008 ஜன., மாதத்தில், 10க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகளுக்கு, பெரியார் பல்கலை இணைவு வழங்கியுள்ளது. அக்கல்லூரிகளில், உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும், சேர்க்கப்பட்ட மாணவர்களை, அதே ஆண்டு மே மாதத்தில் தேர்வெழுதவும் அனுமதித்துள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆறே மாதத்தில் பட்டச்சான்றிதழையும் வழங்கியது.

அந்த பேட்ஜ் படித்த மாணவர்களில் ஒருவரான பிரபு, டி.ஆர்.பி., நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். இவர் தர்மபுரி கிரிவாசன் கல்வியியல் கல்லூரியில், 2008ம் ஆண்டு, பி.எட்., பட்டம் பெற்றுள்ளார். சான்றிதழ் சரி பார்ப்பில், 2007 நவம்பரில், இளங்கலை பட்டப்படிப்பை முடித்த, இவர் அடுத்த ஆறு மாதங்களுக்குள், 2008 மே மாதம் பி.எட்., பட்டம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, இவரது பி.எட்., பட்டம் செல்லாது என, டி.ஆர்.பி., தெரிவித்து, இவருக்கு வேலை வாய்ப்பை மறுத்துள்ளது.

இதனால், இதே பேட்ஜில் படித்த மற்ற மாணவ, மாணவியரும் கடும் அதிர்ச்சியடைந்து, நேற்று பல்கலையை முற்றுகையிட்டனர். ஓமலூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் பதிவாளர் அங்கமுத்து ஆகியோர் மாணவர்களுடன் பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: பெரியார் பல்கலை நடத்திய தேர்வில், வெற்றி பெற்று, பல்கலை வழங்கிய பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்துள்ளது. இதனால், 2008ம் ஆண்டு, பி.எட்., படித்த மாணவர்கள் கலக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். பல்கலை கல்வியியல் கல்லூரிகளுக்கு, ஜனவரி மாதத்தில் தான் அங்கீகாரமே கொடுத்தது. ஆனால், அடுத்த ஆறே மாதத்தில், தேர்வுக்கு மாணவர்களையும் அனுமதித்துள்ளது.

ஓராண்டு பட்டப்படிப்பான பி.எட்., தேர்வெழுத, குறைந்த பட்சம், 900 மணி நேரம் அல்லது, 150 பணி நாள் பங்கேற்க வேண்டும் என, உள்ள அரசு விதிமுறையை, பயன்படுத்தி ஆறே மாதத்தில் மாணவர்களை தேர்வெழுத அனுமதித்தது மட்டுமல்லாமல், பட்டமும் வழங்கியுள்ளது. ஓராண்டு படிப்புக்கு, ஆறு மாதத்தில் சான்றிதழ் வழங்கினால், அது செல்லுமா என்பது குறித்து பல்கலை நிர்வாகிகளுக்கு தெரியாதா என்பது தான் புரியாத புதிர்.

இவை தெரிந்தும், பணத்துக்காக சான்றிதழ்களை வழங்கி, பல மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி உள்ளனர். தற்போது பல்கலையில் கேட்டால், "தவறாக அட்மிஷன் போட்ட கல்லூரியில் போய் கேளுங்கள்" என, கூறுகின்றனர். கல்லூரி வழங்கிய மாணவர் பட்டியலில், தகுதியில்லாத பட்சத்தில், பல்கலை, எதற்காக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அரசு பல்கலை என்பதாலேயே பல நூறு மாணவர்கள், இதுபோல தேர்வு எழுதியுள்ளனர்.

இவர்களின் வாழ்க்கை தற்போது, கேள்விக் குறியாகியுள்ளது. இதை பற்றி இங்கு யாருக்கும் அக்கறையில்லை. பெரியார் பல்கலையில் முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்கதையாகவே உள்ளன.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.