Pages

Thursday, February 21, 2013

ஹால்டிக்கெட் பெறுவதில் மாணவர்கள் கடும் அவதி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 2 தனித் தேர்வாளர்களுக்கான, ஹால்டிக்கெட் புறநகரில் உள்ள பள்ளியில் வைத்து வழங்குவதால் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் முதல் தேதி துவங்குகிறது. பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய மூன்று தாலுகாவை உள்ளடக்கிய பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், இத்தேர்வுக்கு 500க்கும் மேற்பட்ட தனித்தேர்வாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட், பொள்ளாச்சி அடுத்த ஏ.நாகூர் மத்திய மேல்நிலைப்பள்ளியில் மட்டும் வினியோகிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி நகருக்குள் பள்ளிகள் இருந்தும் ஆண்டுதோறும், பிளஸ் 2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் அனைத்தும், 15 கி.மீ., தூரம் தொலைவில் உள்ள பள்ளியில் வழங்கப்படுகிறது. இப்பள்ளி, புறநகர் பகுதியில் திருப்பூர் மாவட்ட எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. பள்ளிக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால், வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை, கோட்டூர் உட்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த தனித்தேர்வாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

தனித்தேர்வாளர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் மையத்தை மாற்றி அமைக்க வேண்டும், என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், மாணவர்களும், பெற்றோர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

"உடனடியாக, இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்" என, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் மையங்கள் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து முடிவு செய்யப்படுகிறது. இதில், கல்வித்துறை அதிகாரிகளின் தலையீடு எதுவும் இல்லை. பல ஆண்டுகளாக, இதே பள்ளிதான் ஹால்டிக்கெட் மையமாக தேர்வு செய்யப்படுகிறது.

மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தி, மாற்று மையம் அனுமதிக்க பரிந்துரை செய்யப்படும். தேர்வுகளை பொறுத்தவரை, தேர்வுத்துறையின் முடிவே இறுதியானது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.