அரும்பாக்கம் வத்தலகுண்டு ஆறுமுக நகரை சேர்ந்தவர் ராதிகா. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எனக்கு மணி பாரதி, கார்த்திக் ராஜா (14) என இரண்டு மகன்கள். அரும்பாக்கத்தில் தனியார் பள்ளியில் கார்த்திக் ராஜா 8ம் வகுப்பு படிக்கிறான். எனது கணவன் 2006ல் இறந்து விட்டார். கார்த்திக் ராஜா படித்த பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கேட்டேன். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. கட்டண ரசீது கேட்டதற்கும் தரவில்லை. மேலும், மகனை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன் அதே பள்ளியில் படித்து வந்த மாணவன் ஒருவன் என் மகனை தாக்கினான். இதுபற்றி புகார் அளிக்க சென்ற போது, பள்ளியை சேர்ந்தவர் முதல்வரை சந்திக்க அனுமதிக்கவில்லை. மேலும், என் மகனிடமே எழுதி வாங்கினர்.
பிறகு பள்ளி நிர்வாகத்தினர் என் மகன் மிகவும் மனவேதனைக்கு உட்படும் அளவுக்கு பலமுறை அசிங்கப்படுத்தியுள்ளனர். கடந்த 7ம் தேதி பள்ளி முதல்வர் மற்றும் பள்ளியை சேர்ந்தவரும், “உங்கள் மகனை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள். வேறு வீடு மாறுவதற்காக பள்ளியை மாற்றிக் கொண்டதாக எழுதி கொடுங்கள்“ என்று கட்டாயப்படுத்தினர். நானும் எழுதி கொடுத்தேன்.
பழிவாங்கும் நோக்கில் மகனை 3 நாட்கள் தரையில் உட்கார்ந்து சாப்பிடும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், எனது மகனை கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை. அமைந்தகரை போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் 8ம் தேதிதான் வழக்குப் பதிவு செய்தனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாயமான மகன் கார்த்திக் ராஜாவை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.