Pages

Thursday, January 24, 2013

கல்வி நிறுவனங்களுக்கு தாற்காலிக சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது சட்டவிரோதமானது

தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தாற்காலிக சிறுபான்மையின அந்தஸ்து வழங்கப்படுவது சட்ட விரோதமானது என்று தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான ஆணையத்தின் தலைவர் நீதிபதி சித்திக்
கூறினார். சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு உள்ள உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பான கருத்தரங்கம் சென்னை புதுக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான ஆணையம் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் நீதிபதி சித்திக் பேசியது: சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு அதற்குரிய அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுபான்மை அந்தஸ்து வழங்கிய பிறகு அதை அவ்வப்போது புதுப்பிக்கவோ, மீண்டும் பரிசீலிக்கவோ மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. கல்வி நிறுவனத்தின் அமைப்பிலோ, தன்மையிலோ மாற்றம் ஏற்பட்டதாக ஆதாரப்பூர்வமாக புகார் வந்தால் மட்டுமே இது தொடர்பாக அரசு விசாரணை நடத்த முடியும்.

எனவே, கல்வி நிறுவனங்களுக்கு தாற்காலிக அந்தஸ்து வழங்குவது சட்ட விரோதமானது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ. போன்ற மத்திய நிறுவனங்களிடம் இருந்து இணைப்பையோ அல்லது அங்கீகாரத்தையோ பெற விரும்பினால் ஆணையத்திடமே நேரடியாக விண்ணப்பிக்கலாம். மாநில பாடத்திட்டத்தில் அங்கீகாரம் பெற விரும்பினால் அந்த அமைப்புகளிடம் விண்ணப்பிக்கலாம். மூன்று மாதங்களில் அங்கீகாரம் பெறவில்லை என்றால் ஆணையத்திடம் புகார் செய்யலாம். அங்கீகாரம் வழங்குவதற்கு ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.

சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் விரும்பும் பல்கலைக்கழகங்களிடம் இணைப்பைப் பெற விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்குவதில் தாமதப்படுத்தினாலும் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திலிருந்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் சிறுபான்மை அந்தஸ்தைப் பெற்று இந்தச் சட்டத்தினால் ஏற்படும் சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம்.

14,908 புகார்கள்: சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கான அந்தஸ்தைப் பெறுவதில் எழும் சிக்கல்கள் போன்றவை தொடர்பாக ஆணையத்துக்கு இதுவரை 14,908 புகார்கள் வந்தன. அவற்றில் 13,147 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. 1,761 புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கேரளத்தில் உள்ள சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் சார்பில்தான் அதிகளவில் புகார்கள் வருகின்றன. நாட்டில் மற்ற பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இந்த ஆணையம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றார் அவர்.

தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் முகமது கலிலுல்லா, ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, தேசிய பெண்கள் கல்விக்கான குழுவின் தலைவர் சபிஸ்டன் கஃபார் உள்ளிட்டோர் இந்தக் கருத்தரங்கில் பேசினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.