Pages

Wednesday, January 30, 2013

ஆசிரியர் பதவி உயர்வில் மாற்றம் செய்ய கோரிக்கை

பள்ளிகளில் வரலாறு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வின் போது தற்போது பின்பற்றப்படும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில் ஆயிரக்கணக்கான வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இளங்கலை வரலாறு முடித்து ஆசிரியர் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது 1:3 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது.
மொத்தமுள்ள வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு பணியிடங்களில் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறு படித்தவர்களுக்கு ஒரு பணியிடமும், இளங்கலையில் வரலாறு தவிர்த்த மற்ற பாடங்கள் படித்தும் முதுகலையில் மட்டும் வரலாறு படித்தவர்களுக்கு 3 பணியிடமும் ஒதுக்கப்படுகிறது. இதனால் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறை முதன்மை பாடமாக படித்த ஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர்.
தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறுகையில், ‘முதுகலை வரலாறு பாடத்திற்கான பதவி உயர்வில் 1:3 என்ற விகிதாச்சார முரண்பாடுள்ள அரசாணை எண் 266ல் மாற்றம் செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
தற்போதைய ஆண்டு நிலவரப்படி பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதவி உயர்வில் உள்ள இந்த ஏற்றுக்கொள்ள முடியாத முறையை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.