Pages

Wednesday, January 16, 2013

பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதியில் அதிகாரிகள் முறைகேடு

தேனி மாவட்டத்தில், இலவச பொருட்களை பள்ளிகளுக்கு அனுப்ப ஒதுக்கிய நிதியை, பள்ளிகளுக்கு வழங்காமல், கல்வித்துறை அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க பள்ளிகளுக்கு அரசு
நேரடியாக நிதி வழங்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.
மாணவர்களுக்கு ஆண்டிற்கு நான்கு முறை சீருடைகள், மூன்று முறை நோட்டு, புத்தகங்கள், கலர் பென்சில்கள், செருப்பு, கணிதவியல் பெட்டி உட்பட பொருட்களை, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது.
இப்பொருட்களை மாவட்டத்திற்கு கொண்டு வருவதில் இருந்து, பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் வரை, அனைத்து செலவுகளையும், கல்வித்துறை ஏற்றுக் கொள்கிறது. இதற்காக, ஒவ்வொரு உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் இருந்தும், ஒவ்வொரு பள்ளியும் எவ்வளவு தொலைவில் உள்ளது என, வரைபடம் தயாரித்து, கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது.
அதன் அடிப்படையில், இலவச பொருட்களை பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு தேவையான நிதியை, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, அரசு வழங்கி விடுகிறது. அவர்கள், இந்நிதியை பள்ளிகளுக்கு வழங்குவதில்லை.
பொருட்களையும், பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதில்லை. மாறாக, அனைத்து பள்ளிகளுக்கும் போன் மூலம் தகவல் தெரிவித்து, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு வந்து பொருட்களை எடுத்துச் செல்லுமாறு, கூறி விடுகின்றனர்.
பள்ளி நிர்வாகங்கள், தங்கள் சொந்த செலவில் இந்த பொருட்களை எடுத்துச் சென்று, மாணவர்களுக்கு வழங்குகின்றனர். அதிகாரிகள், பள்ளிகளுக்கு கொண்டு போய், பொருட்களை வழங்கியதாக கணக்கு காட்டி, நிதி முறைகேடு செய்கின்றனர். இதனால், கல்வித்துறை அதிகாரிகள் மீது, பள்ளி நிர்வாகங்கள் அதிருப்தியில் உள்ளன. பள்ளிகளுக்கு அரசு நேரடியாக நிதி வழங்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.