Pages

Wednesday, January 16, 2013

மார்ச் மாதம் நடராஜ் ஓய்வு: தலைவர் பதவிக்கு கடும் போட்டி

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், மார்ச்சில் முடிவதை அடுத்து, இந்தப் பதவியை பிடிக்க, இப்போதே பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளிடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
ஓய்வுபெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரியான நடராஜ், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றதில் இருந்து, தேர்வாணையத்தில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

இணையதளம் வழியாக பதிவு, ஹால் டிக்கெட் வினியோகம், தேர்வு நடவடிக்கைகள் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை, வீடியோ மூலம் பதிவு, தேர்வு முடிந்ததும், உடனடியாக முடிவை வெளியிட்டு, கலந்தாய்வு முறை அறிமுகம், குறிப்பிட்ட தேர்வுகளை, கம்ப்யூட்டர் வழியாக நடத்துவது என, தேர்வாணைய நடவடிக்கைகள் அனைத்திலும், வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வந்தார்.

இதனால், முந்தைய நிர்வாகத்தினரால் ஏற்பட்டிருந்த களங்கத்தை துடைத்து, லட்சக்கணக்கான பட்டதாரிகள் மத்தியில், மீண்டும் தேர்வாணையத்தின் மீது, நம்பகத்தன்மையை ஏற்படுத்தினார். தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் இருப்பவர்கள், 6 ஆண்டுகள் அல்லது 62 வயது, இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை, பதவி வகிக்கலாம்.

அதன்படி, நடராஜுக்கு, 62 வயது முடிவடைவதால், அவருடைய பதவிக் காலம், மார்ச் இரண்டாவது வாரத்துடன் முடிகிறது. இதையடுத்து, தலைவர் பதவியை பிடிக்க, ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில், இப்போதே கடும் போட்டி எழுந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

பணியில் உள்ள அதிகாரியைக் கூட, தேர்வாணைய தலைவராக நியமிக்க, சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே, பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், தேர்வாணைய பதவியை குறி வைத்து உள்ளனர். யாரைப் பிடித்தால், காரியம் கச்சிதமாக முடியும் என ஆளாளுக்கு, பல்வேறு வழிகளில், முயற்சியில் இறங்கியுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், டி.என்.பி.எஸ்.சி.,யின் நான்கு உறுப்பினர்களின் பதவிக் காலம், ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில், அடுத்தடுத்து முடிவுக்கு வருகின்றன. இதனால், உறுப்பினர்கள் பதவிக்கும், இப்போதே போட்டி துவங்கி உள்ளது. சம்பளமாக கணிசமான தொகை, கார் மற்றும் பல்வேறு வசதிகள், ஒரு பக்கம் இருந்தாலும், சமுதாயத்தில் மிகுந்த மரியாதைக்கு உரிய பதவி என்பதால், இந்தப் பதவிகளை பெரிதும் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.