Pages

Tuesday, January 22, 2013

பி.பி.இ. பட்டத்தை அங்கீகரித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்

பி.ஏ. (பொருளாதாரம்) படிப்புக்கு இணையானது பி.பி.இ. பட்டம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட பி.பி.இ. பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் பணி கிடைக்கவுள்ளது.
தமிழகம் முழுவதும் 2012, மே மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தியது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

இதில், மாவட்டந்தோறும் வணிகவியல் பொருளாதாரம் (பி.பி.இ.) படித்த பட்டதாரிகளும் பொருளாதாரப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். பின்னர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பொருளியல் பாடத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் பி.பி.இ. படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த பட்டத்தை அங்கீகரிக்க இயலாது எனத் தெரிவித்து விட்டது.

பி.ஏ. (பொருளாதாரம்) படிப்புக்கு இணையான படிப்பு பி.பி.இ. என தமிழக அரசு ஆணை பிறப்பித்ததுடன், பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரத்துடன் மாநிலம் முழுவதும் உள்ள பல கல்லூரிகளில் இப் பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருவதை ஆதாரத்துடன் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் காண்பித்தனர். ஆனால், இதுதொடர்பான அரசாணை தங்களது அலுவலகத்துக்கு வரவில்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தப் பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகப் பதிவாளர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பி.ஏ. (பொருளாதாரம்) பட்டத்துக்கு பி.பி.இ. பட்டம் இணையானது என்றும், இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பரிந்துரை செய்தனர்.

இதை ஏற்றுக்கொண்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சனிக்கிழமை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பி.பி.இ. பட்டத்தை அங்கீகரிப்பதாகவும், ஏற்கெனவே ஆசிரியர் பணி மறுக்கப்பட்டவர்களுக்கு விரைவில் பணி வாய்ப்பு குறித்த அறிவிப்பு அந்தந்த துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ஏற்கெனவே ஆசிரியர் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டதால், விரக்தியில் இருந்த பி.பி.இ. பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளதாகவும், விரைவில் ஆசிரியர் பணிக்கான உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் பி.பி.இ. பட்டதாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 comment:

  1. There is no job opportunity for BA Economics students who passed Tet test. Then how can a BBE student who is equvalent to BA economics get job opportunity. PLEASE clear my doubt.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.