Pages

Monday, January 28, 2013

10 பல்கலைகழகங்களில் மொழிப் பயிற்சி கூடங்கள்

மாணவர்களின் மொழியறிவை வளர்க்கும் வகையில், 10 பல்கலைக்கழகங்களில், மொழி பயிற்சி கூடங்களை, அரசு அமைக்க உள்ளது. இதற்காக, 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், பாரதியார், பாரதிதாசன், அழகப்பா, பெரியார், திருவள்ளுவர், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 10 பல்கலைக் கழகங்களில், அரசு மொழி பயிற்சி கூடங்களை அமைக்கிறது.

ஆகிலம், பிரென்ச், ஜெர்மன், சைனிஸ் உள்ளிட்ட மொழிகள், மொழி பயிற்சி கூடத்தில் கற்று தரப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு பல்கலைக்கும், 15 லட்சம் ரூபாய் என, 1.5 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில், அமையுள்ள மொழி பயிற்சி கூடத்தில், 15 கணினிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், ஆங்கிலம், பிரென்ச், ஜெர்மன், சைனிஸ் உள்ளிட்ட மொழிகளின் மென்பொருள்கள், பதிவு செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு மொழியையும் கற்பிக்க, மொழி பயிற்றுனர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இவர்கள், மென்பொருள் உதவியோடு, மாணவர்களுக்கு, படிக்க, எழுத, உச்சரிக்க கற்று தருகின்றனர். மொழிகளை கற்க விரும்பும் மாணவர்கள், விடுமுறை நாள்களிலும், வகுப்புகள் துவங்குவதற்கு முன் மற்றும் முடிந்த பின் பயிற்சியில் பங்கேற்கலாம்.

இதுகுறித்து, சென்னைப் பல்கலை மொழி பயிற்சி கூட ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங்க் கூறியதாவது: இணைப்பு கல்லூரிகளில் உள்ள மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் உள்ள, மொழிப் பயிற்சி கூடங்களை பயன்படுத்தலாம். கல்லூரி நேரங்களிலும், கல்லூரி முடிந்த ஓய்வு நேரங்களிலும், இதை பயன்படுத்தலாம். இங்கு, மூன்று மாத பயிற்சி அளிக்கப்படுகிறது.

சர்வதேச ஆங்கில மொழி தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களே, வெளிநாடுகளுக்கு செல்ல முடிகிறது. மொழி பயிற்சி கூடங்கள், இதுபோன்ற தேர்வுகளுக்கு பயிற்சி கொடுத்து, மாணவர்களின் வெளிநாட்டு கனவை பூர்த்தி செய்கிறது. பல்கலைக்கழகங்கள், உள்ளூர் தூதரகங்களுடன் கைகோர்த்து, மொழி பயிற்சியளிக்கும் திட்டமும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வரும் மார்ச் மாதத்திற்குள், மொழிப் பயிற்சி கூடங்கள் நடைமுறைக்கு வரும். இவ்வாறு, ஆம்ஸ்ட்ராங்க் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.