Pages

Wednesday, December 26, 2012

முதுகலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி: விரைவில் புதிய பட்டியல்? Dinamalar News

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடல்தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். மேலும், சரியான கல்வித்தகுதி
இல்லாதவர்களும், இறுதி பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் நடந்து வருவதால், ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியல் வெளியாக உள்ளது.

அதிகார வட்டாரத்தில் இருந்து வந்த, நெருக்கடி காரணமாக, டி.இ.டி., ஆசிரியர் தேர்வுப் பணி, இடியாப்ப சிக்கலாக மாறி, டி.ஆர்.பி., தவியாய் தவித்து வருகிறது. பணி நியமனத்திற்கு முன், சான்றிதழ்களை சரியாக சரிபார்க்காமல் கோட்டை விட்டுவிட்டு, 18 ஆயிரம் பேருக்கு, பணி நியமனம் வழங்கியாகி விட்டது. உத்தரவுகளை பெற்றவர்கள், பணியிலும் சேர்ந்துவிட்டனர்.ஆனால், இப்போது, மீண்டும் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி, சத்தமில்லாமல், டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது.

பணியில் சேர்ந்து, சம்பளமும் வாங்கிய பின், அவர்களை பணி நீக்கம் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.அப்படி பணி நீக்கம் செய்தால், அரசுத் தரப்பின் மெத்தனப்போக்கு, வெட்ட வெளிச்சத்திற்கு வருவதுடன், பாதிக்கப்படுபவர்கள், கோர்ட் படியேறும் நிலை உருவாகலாம். இதுபோன்ற நிலையில், முதுகலை ஆசிரியர் தேர்விலும், குளறுபடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னையில் நடந்தது.அதிகமான ஆசிரியர்களுக்கு, உத்தரவு வழங்குவதை காட்டுவதற்காக, கடைசி நேரத்தில், திடீரென, 2,308 முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியலும் வெளியிடப்பட்டது. மொத்தம், 2,895 பேரை தேர்வு செய்ய, தேர்வு நடத்திய போதும், வழக்கு காரணங்களால், 587 பணியிடங்களை, "ரிசர்வ்" செய்துவிட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும், தகுதியானவர்கள் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.

முதல்வர் விழாவில், 2,308 பேருக்கும், தேர்வுக்கான உத்தரவு மட்டுமே வழங்கப்பட்டது. இன்னும், அவர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கவில்லை. டி.ஆர்.பி.,யில் இருந்து, 2,308 பேர் சம்பந்தமான கோப்புகளை, பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைத்து, டி.ஆர்.பி., தலைவர், "தேர்வுக் கடிதம்" வழங்கிய பின், அவர்களை பணி நியமனம் செய்வதற்கான பணியை, கல்வித்துறை செய்யும்.

இதுவரை, டி.ஆர்.பி.,யில் இருந்து, கல்வித்துறையிடம், கோப்புகள் ஒப்படைக்கவில்லை. தேர்வு பெற்றவர்கள் அனைவரும், தகுதியானவர்கள் தானா என்பதை, மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணியில், டி.ஆர்.பி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, தகுதியில்லாதவர்கள் பலர் தேர்வு பெற்றுள்ள தகவலை, டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, பல தேர்வர்கள் கொண்டு சென்றனர்.

புகார்களை அலட்சியப்படுத்தாமல், கவனமுடன் ஆய்வு செய்த, டி.ஆர்.பி., தகுதியற்றவர்கள் பலர், தேர்வாகி இருப்பதை கண்டுபிடித்துள்ளது. உடல்திறன் நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வு பெற்றுள்ளனர். ஊனமுற்றோர் பிரிவில், "கட்-ஆப்" மதிப்பெண்கள் குறைவு என்பதால், இந்தப் பிரிவில், பலர் தேர்வாகி உள்ளனர். இவர்களுடைய தேர்வு, உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் மட்டும், 20க்கும் மேற்பட்டோர், நீக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.

 சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களும், இறுதி தேர்வுப் பட்டியலில், தேர்வாகி உள்ளனர். எம்.எஸ்சி., ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி படிப்பிற்கு நிகரானது கிடையாது. ஆனால், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவர்களும், தேர்வாகி உள்ளனர். ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்த ஒருவர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் தேர்வாகியும், சரியான கல்வித்தகுதி இல்லை என கூறி, அவரது தேர்வை, டி.ஆர்.பி., நிராகரித்துள்ளது. ஆனால், அதே தேர்வர், முதுகலை ஆசிரியர் தேர்வில், தேர்வாகி உள்ளார். இது எப்படி சாத்தியம் என, தேர்வர்கள் கொதிக்கின்றனர்.

"கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்" படித்தவர்கள், ரெகுலர், "ஆங்கிலம்" பாடத்திற்கு நிகரானவர்கள் கிடையாது. ஆனால், "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்" படித்தவர்கள் பலர், தேர்வு பெற்றுள்ளனர். இதுபோன்ற தகுதியற்றவர்களை கண்டுபிடித்து, அவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.

இதன் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. தகுதியற்றவர்கள் நீக்கத்தால், அடுத்த, "ரேங்க்"கில் உள்ளவர்களை தேர்வு செய்து, அவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டிய கட்டாயத்தில், டி.ஆர்.பி., உள்ளது. எனவே, ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியலை எதிர்பார்க்கலாம்.

டி.இ.டி., மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில், இன சுழற்சி வாரியாக, "கட்-ஆப்&' மதிப்பெண்கள் விவரங்களை, இதுவரை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. அதேபோல், இணையதளத்தில், தனிப்பட்ட தேர்வர், தங்களுடைய தேர்வை தெரிந்து கொள்வதற்கு ஏற்ப மட்டுமே, தகவல் தரப்படுகிறது. பாட வாரியாக தேர்வு பெற்ற அனைவரின் தகவல்களையும், ஒரே பட்டியலில் வெளியிடுவது இல்லை.

இதுபோன்று பட்டியல் வெளியிட்டால், தகுதியானவர்கள் மட்டும் தான் தேர்வாகி இருக்கிறார்களா என்பதை, அனைவருமே தெரிந்து கொள்ள முடியும். தற்போது, அதற்கு வழியில்லாமல் உள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்களையும், அவர்கள், பிரிவு வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரங்களையும், அனைத்து தேர்வர்கள் பார்வைக்கு, டி.ஆர்.பி., வெளியிட வேண்டும்.

இப்படி எதையுமே செய்யாமல், "வெளிப்படையாக தேர்வுப் பணிகள் நடக்கிறது" என, டி.ஆர்.பி., திரும்ப திரும்ப கூறி வருவது, தேர்வர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.