Pages

Sunday, December 16, 2012

அரசு பள்ளி மாணவர்கள் வாய்க்காலில் தண்ணீர் எடுக்கும் அவலம்

ஈரோடு மாவட்டம் கவுண்டிச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இருவர் பள்ளி வேலை நேரத்தில், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் எடுத்த போது தவறி விழுந்தனர். பல இடங்களில் இதுபோன்று மாணவ, மாணவியரை உயிரை பணயம் வைக்கும் பணிகளுக்குக்கூட பயன்படுத்துவது, தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தொடர்கிறது.
பள்ளி மற்றும் வகுப்பறைகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், அரசு விழாக்களில் கூட மாணவர்களை பயன்படுத்துவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இவ்வாறு மாணவர்களை, படிப்பு சாராத பிற பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என, பள்ளிக் கல்வித்துறை, நீதிமன்றங்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

"தனியார் பள்ளி, அரசு பள்ளியானாலும், அங்குள்ள குழந்தைகளை பள்ளி நேரங்களில், பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. பெற்றோர், பாதுகாவலரின் முன் அனுமதி பெற்று, வெளியே செல்ல அனுமதிக்கலாம்" என, சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும், இதுபோன்ற உத்தரவுகளை பெரும்பாலான பள்ளிகள் கடைபிடிப்பதில்லை.அதுபோன்ற சம்பவம் ஈரோடு மாவட்டம், சென்னிமலை செல்லும் சாலையில் உள்ள கவுண்டிச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பள்ளி மெயின் ரோட்டில் உள்ளது.

ரோட்டின் ஓரங்களில் பல மரக்கன்றுகள் வைக்கப்பட்டு, அவற்றை இப்பள்ளி மாணவர்கள் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். இம்மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற, பள்ளி வளாகத்தில் தண்ணீர் வசதி இல்லை. இதனால், ரோட்டின் மறுபுறம் கீழ்பவானி வாய்காலில் இறங்கி, மாணவர்கள் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றும் அவலம் தொடர்கிறது.

இப்பள்ளி அருகே கீழ் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இதில், 2,000 கனஅடி தண்ணீர் தற்போது செல்கிறது. வாய்காலின் ஓரப்பகுதியில் மூன்று அடியும், மையப்பகுதியில் ஆறு அடிக்கு மேல் ஆழம் உள்ளது. மையப்பகுதிக்கு சென்றால், இழுவை அதிகம் இருக்கிறது.

இந்நிலையில், இப்பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் சீருடையில், கையில் சில்வர் அண்டாவுடன் (2 குடம் நீர் கொள்ளளவு) வாய்க்காலுக்கு வந்தனர். பாத்திரத்துடன் படிக்கட்டு வழியாக இறங்கிய அம்மாணவன், வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரை முழுமையாக எடுத்தபோது, கால்இடறி வாய்க்காலில் விழுந்தனர். சுதாரித்து கொண்ட எழுந்து, தண்ணீரைப் பிடித்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி, பலமுறை இறங்கி தண்ணீர் எடுத்தனர்.

அம்மாணவர்கள் கூறியதாவது:கவுண்டிச்சிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கிறோம். பள்ளி வளாகம் மற்றும் ரோட்டில் வளர்க்கப்படும் செடிகள் தண்ணீர் இல்லாமல் வாடுகிறது. இதற்காக, தண்ணீர் எடுத்த ஊற்ற ஆசிரியர்கள் கூறியதால், வாய்க்காலில் தண்ணீர் எடுத்து ஊற்றுகிறோம் என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.