உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தி, 15 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இன்னமும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முயற்சி மேற்கொள்ளப்படாததால், ஓட்டேரி அரசு பள்ளி மாணவர்கள் திறந்த வெளியில் பாடங்களை பயின்று வருகின்றனர்.
வண்டலூர் ஊராட்சி, ஓட்டேரி விரிவு பகுதியில் உள்ள அரசு பள்ளி, உயர்நிலை பள்ளி அளவிற்கே இருந்ததால், மேல்நிலை பள்ளிகளை தேடி அப்பகுதி மாணவர்கள் தாம்பரம், நந்திரவரம் செல்ல வேண்டியிருந்தது. பெற்றோர் கோரிக்கையை ஏற்று, 2011ல், இந்த பள்ளி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
தற்போது, 215 மேல்நிலை பள்ளி மாணவர்கள் உட்பட, 800 பேர் படிக்கின்றனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற் போல், வகுப்பறைகள் இல்லை. பள்ளியை தரம் உயர்த்தும் போதே, கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரிகள் அப்படி செய்யாததால், வகுப்பறைகள் இன்றி மாணவர்கள், பள்ளி வளாகத்தில், திறந்த வெளியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால், ஆய்வக அறையிலும், திறந்த வெளியிலும் அமர வைத்து, மாணவர்களுக்கு பாடம் கற்பித்து தரப்படுகிறது,&'&' என்றார்.
மேலும், "வகுப்பறைகள் மட்டுமின்றி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆய்வகம், கழிப்பறைகளும் இல்லை. கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று கேட்டு, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் பல முறை கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை,&'&' என்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் சகுந்தலா கூறுகையில், "மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளுக்கும், வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிகள், நபார்டு திட்டத்தின் மூலம் நடைபெற்று வருகின்றன. ஓட்டேரி அரசு மேல்நிலை பள்ளிக்கு, அடுத்த கல்வி ஆண்டில், வகுப்பறை கட்டடங்கள் மற்றும் இதர வசதிகள் செய்து தர, நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றார்.
எந்த ஒரு திட்டத்தையும், சரியான பணி, திட்டம் இல்லாமல் செயல்படுத்துவதே, அரசு அதிகாரிகளின் வழக்கமாகிவிட்டது. உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த முடிவு செய்த போதே, புதிய கட்டடங்களை கட்டியிருக்க வேண்டும். பள்ளியை தரம் உயர்த்திவிட்டு, பின் கட்டடங்கள் கட்டுவது குறித்து யோசிப்பது, எந்த வகையில் சரி என்ற, கேள்வி இந்த பகுதி மக்களிடையே எழுந்து உள்ளது.
இதனால், மாணவர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.அடுத்த கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகளுக்கான திட்டம் தீட்டப்பட்டு, அது பயன்பாட்டிற்கு வருவதற்கு, பல ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை, மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்பட வேண்டுமா?
கல்வித்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில், போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.