Pages

Monday, December 31, 2012

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மறுஆய்வு தேவை

நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி பாடத் திட்டத்தில் மறுஆய்வு தேவை என்று தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் சிதான்சு எஸ்.ஜெனா கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா  சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2010-11, 2011-12 ஆகிய கல்வியாண்டுகளில் பயின்ற மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 481 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்குத் தலைமையேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினார்.

விழாவில் சிதான்சு எஸ்.ஜெனா ஆற்றிய உரை:

மாணவர்களை நல்ல குடிமக்களாக மாற்றுவதற்கு நெறி சார்ந்த கல்வி மிகவும் அவசியம். மனித உரிமைகள், நல்லிணக்கமாக வாழ்வது, அமைதியை விரும்புவது, ஜனநாயக மரபுகள், பிறருக்காக உதவுவது ஆகிய பண்புகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில், ஆசிரியர் கல்வியில் உரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

இப்போதைய கல்விமுறை தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றிடம் முழுமையாக சரணடைந்துள்ளது. மனித பண்புகளுக்கோ, மற்றவர்களை மதிப்பதற்கோ கல்வி முறை முக்கியத்துவம் வழங்குவதில்லை. நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக முழுமையான புரிதலையோ, அறிவையோ இன்றைய கல்வி முறை வழங்கவில்லை.

மாணவர்களிடம் போட்டி மனப்பான்மையைத்தான் கல்வி நிறுவனங்கள் வளர்க்கின்றன. இணைந்து செயல்படுவது என்ற பண்பு மாணவர்களிடம் மறைந்துவருகிறது.

மாணவர்கள் பல சாதனைகளைப் புரிந்தாலும் அவர்களிடம் மனிதநேயம் குறைந்துவருகிறது.

எனவே, மனித மதிப்பீடுகள், நெறிசார்ந்த கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது மிகுந்த அவசியமாகிறது. இயற்கையை ரசிக்கவும், மனித உறவுகளை மதிக்கவும், கலைகளைப் படைக்கவும், பிறருக்காக இரங்கும் மனப்பான்மையையும் மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் ஆசிரியர் கல்வி இருக்க வேண்டும்.

கல்வி சார்ந்த சில குறிப்புகளையோ, ஆய்வுகளையோ மட்டும் ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்காமல் உலகமயமாக்கல், அமைதி, ஊடகம், கலாசாரம், ஜனநாயகம் குறித்து ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர் ஒவ்வொருவரிடத்திலும் உள்ள தனித்தன்மையை அறிந்து அதனை ஊக்குவிக்க வேண்டும். கற்பித்தலுக்கான புதிய வழிமுறைகளையும், சூழல்களையும் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றார் சிதான்சு எஸ்.ஜெனா.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் பி.பழனியப்பன், துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன், உயர் கல்வித் துறைச் செயலாளர் அபூர்வ வர்மா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.