அரசு பி.எட்., கல்லூரியில், மாணவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முதல்வர், அதே கல்லூரியில், பேராசிரியராக பதவியிறக்கம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை அரசு பி.எட்., கல்லூரியில், முதல்வர் பணியிடம் காலியானதைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, அன்புச்செழியன் என்பவர், கல்லூரி முதல்வராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.
அவர் மீது, பெற்றோர் - ஆசிரியர் கழகம் என்ற பெயரில், மாணவர்களிடமிருந்து வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும், மாணவியரை, நயன்தாரா, அமலாபால் என, நடிகைகளின் பெயரை குறிப்பிட்டு அழைப்பதாகவும், தனியார் பி.எட்., கல்லூரி நிர்வாகத்தினரை மிரட்டி வசூல் வேட்டை நடத்துவதாகவும், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவரது நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர், கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், திடீர் ஆய்வு மேற்கொண்ட, திருச்சி மண்டல பி.எட்., கல்லூரிகளின் இணை இயக்குனர் வீரமணி, முதல்வர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மாணவர், ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் தனித்தனியோ விசாரணை நடத்தினார்.
அதேபோன்று, தனியார் பி.எட்., கல்லூரி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில், முதல்வர் அன்புச்செழியன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
இதையடுத்து, புதுக்கோட்டை அரசு பி.எட்., கல்லூரி முதல்வர் அன்புச்செழியன் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை மீண்டும், அதே கல்லூரியில் பேராசிரியராக பதவியிறக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரி முதல்வர் சிவ கார்த்திகேயன், அரசு பி.எட்., கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கல்வித்துறையின் விதிமுறைகளை மீறி, முன்னாள் முதல்வர் அன்புச்செழியன் வசூல் செய்த கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு புதிய முதல்வர் சிவ கார்த்திகேயன் நடவடிக்கை எடுப்பார் என, மாணவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.