Pages

Saturday, October 20, 2012

மாநகராட்சி பள்ளிகளில் சாக்பீஸ், கரும்பலகைக்கு குட்பை

மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
திட்டத்தின் முதல் கட்டமாக மணியகாரன்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் முதல் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் (ஏ.ஐ.எப்) எனும் அமைப்பின் நிதியுதவியுடன், டிஜிட்டல் ஈக்குவலைசர் எனும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்தகட்டமாக பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகளை துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.சி., வசதியுள்ள இந்த வகுப்பறைகளில் "டெல்' மற்றும் ஏ.ஐ.எப். அமைப்பின் சார்பில் 25 கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர், டிஜிட்டல் பிளாக்போர்டு, இன்டெர்நெட் இணைப்பு, புரொஜக்டர் உள்ளிட்ட வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் கோவை ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் கூறியதாவது: வருங்காலங்களில் கம்ப்யூட்டர் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட நவீன உலகில், மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து வெளியேறும் மாணவர்களும் நிலைத்து நிற்க, அவர்களுக்கும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப அறிவு முக்கியம்.

மாணவர்களின் கம்ப்யூட்டர்கள், ஆசிரியர் வசமுள்ள கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் இன்டர்நெட் இணைப்பை மாணவர்களால் தவறாக பயன்படுத்த முடியாது.

இன்டெர்நெட் இணைப்பு உள்ளதால், பாடம் தொடர்பான தகவல்கள் மற்றும் படங்களை உடனுக்குடன் "டவுன்லோடு' செய்து படிக்கலாம். இதே வசதியுள்ள பிற மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன், "வீடியோ கான்பிரன்ஸ்' முறையில் பாடம் தொடர்பாக கலந்துரையாடலாம்.

"சாக் அண்டு டாக்' எனும் பழைய கற்பித்தல் முறைக்கும், மனப்பாட கல்வி முறைக்கும் இனி "குட்பை' சொல்லி விடலாம். இத்திட்டம் பெறும் வெற்றியின் அடிப்படையில், மீதமுள்ள பள்ளிகளிலும் துவங்கப்படும். 2014 வரை செயல்படுத்தப்படும் இத்திட்டம், அதன் பின் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.