Pages

Friday, October 5, 2012

12 லட்சம் பேர் ஆர்வமாக எழுதிய தேர்வு குரூப் 4 ரிசல்ட் வெளியிட தடை நீக்கம்

தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 7ம் தேதி குருப் 4 (காலி பணியிடம் 10,718), குரூப் 8 (நிர்வாக அலுவலர் காலி பணியிடம் 75) என மொத்தம் 10,793 பணி இடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியது.
இந்த 2 தேர்வையும் காலை, மாலை என மொத்தம் 12 லட்சத்து 33 ஆயிரத்து 731 பேர் எழுதினர். குரூப் 8 தேர்வை மட்டும் 3 லட்சத்து 53 ஆயிரத்து 561 பேர் எழுதினர். இந்தநிலையில், இந்த தேர்வு முடிவை வெளியிடக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகாவை சேர்ந்த சின்னசாமி, முருகேசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் 10 ஆயிரத்து 718 காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய எழுத்து தேர்வை கடந்த ஜூலை 7ம் தேதி நடத்தியது. நான் மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன். நான் ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், டைப்பிஸ்ட் ஆகிய பணிகளில் சேர விண்ணப்பித்திருந்தேன்.

நான் தர்மபுரியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதினேன். எனக்கு வழங்கிய வினா, விடைத்தாள் சரியாக அச்சடிக்கப்பட வில்லை.உடனே இதுபற்றி தேர்வு மையத்தில் இருந்த மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவித்தேன். அவர் எதுவும் செய்யவில்லை. மொத்தம் 200 கேள்விகள். இதில் 105 கேள்விகள் மட்டும் அச்சடிக்கப்பட்டு இருந்தது.
ஓஎம்ஆர் படிவத்தில் என்னால் 95 கேள்விகளுக்கு விடையளிக்க முடியவில்லை. இதுபற்றி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மீண்டும் தேர்வு நடத்தக்கோரி தேர்வாணையத்திற்கு மனு கொடுத்தேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எனக்கு வேலை கிடைக்காது. தேர்வாணையத்தின் தவறால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே குரூப் 4 தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே நடந்த தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதி நாகமுத்து விசாரித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவை வெளியிட 2 வாரத்திற்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி உத்தரவிட்டார். இந்த தடையை நீக்க கோரி டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘மனுதாரர்கள் கூறியது சரியானதுதான். ஒரே ஒரு தேர்வு மையத்தில் மட்டும் சரியாக அச்சடிக்கப்படாத வினா மற்றும் விடைத்தாள் தரப்பட்டது. எனவே அந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 13 பேருக்கு மட்டும் மீண்டும் தனியாக தேர்வு நடத்தி முடிவு வெளியிடப்பட்டது.

எனவே தடையை நீக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு, குரூப் 4 தேர்வு முடிவு வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனால் 10 ஆயிரத்து 718 காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

உத்தரவு நகல் கிடைத்ததும் ரிசல்ட்: நீதிமன்ற உத்தரவு குறித்து, டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் குரூப் 4, குரூப் 8 தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்று கோர்ட் அறிவித்துள்ளதால், தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட தயாராக உள்ளது. நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்ததும் எந்த நேரத்திலும், ரிசல்ட் வெளியிடப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.