Pages

Tuesday, August 28, 2012

சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிக்கு நோட்டீஸ்


தமிழக அரசின் அங்கீகாரத்துடன் இயங்கும் பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில், பிரபல தனியார் பள்ளி ஒன்றில், இத்தகைய முறைகேட்டை கண்டுபிடித்த, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற, பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தையே பின்பற்ற வேண்டும். ஆனால், பிரபல தனியார் பள்ளிகள், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களையே அமல்படுத்துகின்றன.

மெட்ரிக் பாடத் திட்டத்திற்கு நிகராக, சமச்சீர் கல்வி திட்டம் இல்லை என, குறைபடும் இத்தகைய பள்ளிகள், சமச்சீர் பாடத் திட்டத்தை புறக்கணித்துள்ளன. இது, அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது. ஆனால், உள்ளூரில் உள்ள கல்வி அதிகாரிகளை, சரிக்கட்டி தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், சென்னை, முகப்பேரில் உள்ள பிரபலமான மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டத்திற்குப் பதிலாக, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் செயல்படுத்தப்படுவது, அரசின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, ஐந்து பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைத்து, திடீரென பள்ளியில் ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.

அதன்படி, பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்ட, குழுவைச் சேர்ந்த, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளியில் விதிமீறல் நடந்துள்ளதாக, கடந்த 1ம் தேதி, இயக்குனரகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

அறிக்கையில் அவர் கூறிஇருப்பதாவது: ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப் படுத்தவில்லை. ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு, சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களுடன், கூடுதலாக, சி.பி.எஸ்.இ., கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

8ம் வகுப்பு மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்று, பொதுக்கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி திட்டத்தை பின்பற்றாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை நடத்தி வருவது, மெட்ரிக் பள்ளிகளின் விதிமுறைகளுக்கு முரணானது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், விதிமுறையை கடைபிடிக்காத பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் எனவும், இயக்குனருக்கு அவர் பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில், கடந்த 14ம் தேதியிட்ட இயக்குனரின், "நோட்டீஸ்&' பள்ளிக்கு அனுப்பப்பட்டது.

நேற்று மாலை, பள்ளி நிர்வாகம் இதற்கு பதிலளித்து உள்ளதாகவும்; அதில், செய்த தவறுக்கு உரிய பதிலை அளிக்காமல், பள்ளியின் சாதனைகளை அளந்துள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில், அரசின் ஆலோசனையைப் பெற்று, விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகளை பட்டியல் எடுத்து, சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து, முறைகேடு செய்துள்ள பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.