இந்தியாவில் உள்ள, ஐ.ஐ.டி.,க்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னையை சேர்ந்த விஞ்ஞானி, முரளிதரன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, இட ஒதுக்கீடு, கல்வி நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டியது அவசியம். ஆனால், சுதந்திரம் பெற்று, இன்று வரை, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில்லை. மாணவர் சேர்க்கை மட்டும் அல்லாது, பேராசிரியருக்கான பணியிடங்களை நிரப்புவதிலும் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
உயர்கல்வி நிறுவனங்களில், தாழ்த்தப்பட்டோருக்கு, 15 சதவீதமும், பழங்குடியினருக்கு, 7.5 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீதமும் வழங்க வேண்டும்.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து, கேள்வி எழுப்பினேன். இன்று வரை அந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என்ற உண்மை, அதில், தெரிந்தது.
‘பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது, பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு, தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பம் பெற்று, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் வருகிற எந்த உயர்கல்வி நிறுவனங்களும் இதை பின்பற்றுவதில்லை.
இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தில் புகார் செய்தேன். அவர்கள் அந்த புகாரை சென்னையில் உள்ள ஆணையத்திற்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டனர்.பின்னர், திடீரென, சென்னையில் உள்ள, ஐ.ஐ.டி., நிறுவனம், பல்வேறு இடங்களை, இட ஒதுக்கீட்டின் அடிப்படை அல்லாமல் நிரப்பி, பணி நியமனங்கள் வழங்கினர்.இதை எதிர்த்தும், டில்லியில் உள்ள தேசிய ஆணையத்தில் புகார் செய்தேன். அவர்கள், இது குறித்து விசாரித்து வருகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாதது குறித்து, தேசிய தலைவர்களிடம் புகார் செய்ய முடிவு செய்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.