Pages

Thursday, August 30, 2012

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா காலணி, பாடப் புத்தகம், சைக்கிள், வண்ணப் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, ஊக்கத் தொகை உள்ளிட்ட, 14 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும், 12.50 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கிரையான் பென்சில் வழங்குவதற்கான பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலும், 35 லட்சம் மாணவர்களுக்கு, வண்ணப் பென்சில் வழங்கும் திட்டமும், இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் தலா, 16, தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கப்படுகின்றன.

பாக்கெட்டின் முன்புறம், தமிழக அரசின் முத்திரையுடன், முதல்வர் படம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்புறம், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, மாவட்டம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. வகுப்புகளில், பென்சில் பாக்கெட்டுகள் மாறிவிடாமல் இருக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மூன்று திட்டங்களுக்கும், டெண்டர் விடப்பட்டு, தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது, பென்சில், கிரையான் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி தயாரிக்கும் வேலை, மும்முரமாக நடந்து வருகிறது. செப்டம்பர் இறுதி வாரத்தில் இருந்து, அனைத்து மாணவ, மாணவியருக்கும், கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி வழங்கப்படும் என, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.