Pages

Tuesday, August 21, 2012

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 19,124 விலையில்லா மிதிவண்டிகள்

நடப்பு நிதி ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் 19,124 மாணவ, மாணவியருக்கு ரூ.6 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விலையில்லா மிதிவண்டிகளை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடாசலம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைகள் அலுவலர்களிடம் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

இது குறித்து ஆட்சியர் கூறியதாவது: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பாக 14,092 மாணவ, மாணவிகளுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 5,032 மாணவ, மாணவிகளுக்கும், ஆக மொத்தம் 19,124 விலையில்லா மிதிவண்டிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 86 பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த மிதிவண்டிகள் தற்பொழுது திண்டுக்கல் கல்வி மாவட்டங்களில் 7 இடங்களிலும், பழனி கல்வி மாவட்டத்தில் 8 இடங்களிலும் ஆக மொத்தம் 15 பள்ளிகளில் மிதிவண்டிகளின் பாகங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் அந்தந்தப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக வழங்கப்படும்.

முதல்வரின் உத்தரவுபடி ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. அரசு அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கல்வித்துறையில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் உரிய காலத்தில் மாணவர்களுக்கு கிடைத்து பயன்பெற செய்திட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

திண்டுக்கல் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மிதிவண்டிகள் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் உஷா, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் வெங்கடேசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சந்திரா, வட்டாட்சியர் நடராஜன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.