அரசு பள்ளிகளில்,
தினமும் ஒவ்வொரு மெனு, 13 வகை சாப்பாடு, ஐந்து வகை முட்டை ஸ்பெஷல் என
அசத்தல் திட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு
பயிற்சியளிக்கப்படுகிறது.
தற்போது, பள்ளி சத்துணவு
திட்டத்தை, அரசு கொஞ்சம் கொஞ்சமாக, நவீனப்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக,
ஆண்டுதோறும் புதிய பாத்திரங்கள், விறகுக்கு பதிலாக காஸ் இணைப்பு என,
பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது.
ஆனால், பள்ளி சத்துணவு சமைக்கும் முறையில்,
பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. அரசு வழங்கும் நிதியை கொண்டு, பள்ளிகளில்
உயர் தரமாக தினமும் விதவிதமான, "மெனு' கொடுத்து, அசத்த முடியும் என்பதை,
"செப்' தாமு நிரூபித்துள்ளார். சென்னை சைதாபேட்டை, மாந்தோப்பு அரசு
பள்ளியில், உணவுத் துறை அமைச்சர் சம்பத் முன்னிலையில், "செப்' தாமு
மாணவர்களுக்கு கமகம மணத்துடன், சத்துணவு தயாரித்து கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 16 மாவட்டத்திலுள்ள சத்துணவு
அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு சுவையான ஆரோக்கியமான சத்துணவு சமைப்பது,
சுகாதார முறைகளை கடைபிடிப்பது குறித்து, பயிற்சி அளித்துள்ளார்.
"செப்' தாமு, கோவையில், "தினமலர்' நிருபரிடம்
கூறியதாவது: பள்ளிகளில் சத்துணவு சுவையாக இல்லாததால், மாணவர்கள் சாப்பாட்டை
முழுமையாக சாப்பிடாமல், வீணாக கொட்டுவதை பார்த்ததால், மாணவர்களுக்கு
சுவையான சாப்பாடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தற்போது,
சத்துணவில் சாப்பாடு, சாம்பார், வாரத்தில் ஐந்து நாள் அவித்த முட்டை, ஒரு
நாள் கொண்டைக் கடலை அல்லது பாசிப்பயறு அல்லது உருளைக் கிழங்கு வேகவைத்து
கொடுக்கப்படுகிறது.
அதே பொருட்களை கொண்டு, உயர் தரத்துடன்,
ஆரோக்கியமான முறையில், சுவையான சாப்பாடு தயாரித்து கொடுக்க வேண்டும்
என்பதற்காக திட்டமிட்டேன். அரசு வழங்கும் நிதிக்குள், இந்த திட்டத்தை
அமைத்தேன்.
சத்துணவில், கொண்டைக் கடலை பிரியாணி, தக்காளி
புலாவ், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி,
கீரை சாதங்கள், பிஸ்மலாபாத், கடலை குழப்பு சாதம், சாம்பார் சாதம், பிரைடு
ரைஸ், காய்கறி கலந்து மசால் சாதம் ஆகிய, 13 வகையான நாவுக்கு ருசியான
சாப்பாடு தயாரிக்க முடியும். இந்த திட்டத்தை "டெமோ' பார்க்க, சென்னையில்,
ஸ்பெஷல் மெனு அடிப்படையில், சத்துணவு தயாரித்து கொடுத்தேன். குழந்தைகள்
உணவை வீணடிக்காமல், மறுபடியும் விரும்பி வாங்கி சாப்பிட்டனர்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில்,
விதவிதமான உணவு வகைகள் சமைக்க, பயிற்சி அளித்து வருகிறேன். இதன் மூலம்,
சத்துணவு திட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுள்ளது. இவ்வாறு,
"செப்' தாமு தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.