பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு
உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது என்று கல்வியாளர்கள்
தெரிவித்தனர்.
பி.இ. படிப்பைப் பொருத்தவரை மிக அதிக மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களுக்கான
கட்-ஆஃப் மதிப்பெண், கடந்த ஆண்டைவிட 1 மதிப்பெண் வரை குறைய வாய்ப்புள்ளது. அதாவது,
இந்த ஆண்டு பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 முதல் 200-க்கு 185 வரை
எடுத்துள்ளவர்களுக்கு பி.இ. படிப்பில் சேரும்
வாய்ப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்
1 மதிப்பெண் வரை குறையும் சாதக நிலை உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 185-க்குக் கீழே எடுத்துள்ளவர்களுக்கு, கடந்த
ஆண்டைக் காட்டிலும் கட்-ஆஃப் மதிப்பெண் அதிகபட்சம் 2 மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.
சராசரியாக 15,000 மாணவர்கள்: பி.இ. படிப்பைப் பொருத்தவரை 200-க்கு 200
கட்-ஆஃப் மதிபெண்ணில் தொடங்கி, 200-க்கு 190 கட்-ஆஃப் மதிப்பெண் வரை ஒவ்வொரு ஆண்டும்
15,000 மாணவர்கள் இடம்பெறுகின்றனர். 200-க்கு 200-ல் தொடங்கி ஒவ்வொரு 0.25 கட்-ஆஃப்
மதிப்பெண்ணுக்கும் இடையே சராசரியாக 50 மாணவர்கள், 100 மாணவர்கள், 150 மாணவர்கள் என
கீழ் நிலையில் இருந்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும். இந்த
அடிப்படையில் சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பாடப் பிரிவு இடங்களும் நிரம்பிவிடும்
என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் என்ன ஆகும்? கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பி.இ.
படிப்புக்கு உரிய கணிதம்-இயற்பியல்-வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 கட்-ஆஃப்
மதிப்பெண்ணை 120 மாணவர்களும், எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய
உயிரியல்-இயற்பியல்-வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்ணை 65
மாணவர்களும் எடுத்திருந்தனர். இதனால் எம்.பி.பி.எஸ். படிப்பில் முதல் கட்ட
கலந்தாய்வின்போது பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆகவும்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.75-ஆகவும்
இருந்தது. இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த
ஆண்டைக் காட்டிலும் 0.5 மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது; அதாவது எம்.பி.பி.எஸ்.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ஆகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஆகவும் குறைய
வாய்ப்புள்ளது.
கட்-ஆஃப் மதிப்பெண் குறைவுக்குக் காரணம் என்ன? பி.இ. மற்றும் எம்.பி.பி.எஸ்.
படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு
142 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 பெற்றுள்ளனர்.
பி.இ. படிப்புக்கு உரிய கணிதத்தில் 2656 பேர் 200-க்கு 200 மதிப்பெண்
பெற்றுள்ளனர்; கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கணிதத்தில் சதம் அடித்தவர்களின்
எண்ணிக்கை இந்த ஆண்டு 64 பேர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், ஏராளமான மாணவர்களுக்கு பி.இ. மற்றும்
எம்.பி.பி.எஸ். படிப்பின் கட்-ஆஃப் மதிப்பெண்ணைத் தீர்மானிக்கும் இயற்பியல்
பாடத்தில் மதிப்பெண் குறைந்திருந்தாலும்கூட, இயற்பியலில் குறைந்த மதிப்பெண்ணை
வேதியியலில் மாணவர்கள் பெற்ற அதிக மதிப்பெண் சரி செய்துவிட்டது. இதனால் இயற்பியல்
மதிப்பெண் குறைவு காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் பாதிப்பு இந்த
ஆண்டு ஏற்படவில்லை என்றும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
2005 முதல் 2012 வரை...
பிளஸ் 2 தேர்வில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்த ஆண்டு (2012) வரை
கணிதம்-இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய முக்கியப் பாடங்களில் 200-க்கு 200
மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம்:
பாடம் 2005 2006 2007 2008 2009 2010 2011 2012
கணிதம் 2611 855 1568 3852 4060 1762 2720 2656
இயற்பியல் 1131 17 217 282 245 231 646 142
வேதியியல் 1677 119 145 306 467 741 1243 1444
உயிரியல் 1227 81 129 153 218 258 615 620
எம்.பி.பி.எஸ்.: பழைய மாணவர்கள் ஆசை நிறைவேற ரூ.5 லட்சம்!
எம்.பி.பி.எஸ். படிப்பில் இந்த ஆண்டு பழைய மாணவர்கள் சேர விரும்பினால்,
பிடிஎஸ் படிப்பு உள்பட வேறு மருத்துவம் சார்ந்த படிப்பிலிருந்து விலக ரூ.5 லட்சம்
அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் ஏராளமான மாணவர்கள் அதிக கட்-ஆஃப் மதிப்பெண்
எடுத்தும்கூட எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்கவில்லை. அத்தகைய மாணவர்களில்
பலர் பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்தனர்.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் குறைவதற்கான
வாய்ப்பு உள்ளதால், பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்த பழைய மாணவர்கள் விண்ணப்பத்தை
வாங்கியுள்ளனர். இத்தகைய மாணவர்கள் பல் மருத்துவப் படிப்பிலிருந்து விலகி
எம்.பி.பி.எஸ். படிப்பில் இந்த ஆண்டு சேர ரூ.5 லட்சத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும்.
35 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விற்பனை: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்த ஆண்டு கடந்த மே 15-ம் தேதி முதல் விண்ணப்பத்தை
மருத்துவக் கல்வி தேர்வுக் குழு விநியோகித்து வருகிறது. முதல் கட்டமாக 25 ஆயிரம்
விண்ணப்பங்களும் அவை தீர்ந்துபோய் அடுத்த கட்மாக 15 ஆயிரம் விண்ணப்பங்கள் என மொத்தம்
40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 35 ஆயிரம் மாணவர்கள்
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பத்தை வாங்கியுள்ளனர் என்று மருத்துவக் கல்வி
தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் தெரிவித்தார்.
200-க்கு 200 பி.இ.-35 மாணவர்கள்; எம்.பி.பி.எஸ்.-16 மாணவர்கள்
தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பி.இ. படிப்புக்கு உரிய முக்கிய
பாடங்களில் (கணிதம்-இயற்பியல்-வேதியியல்) 35 மாணவர்கள் 200-க்கு 200 கட்-ஆஃப்
மதிப்பெண் எடுத்துள்ளனர். எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய முக்கியப் பாடங்களில் (உயிரியல்-இயற்பியல்-வேதியியல்)
16 மாணவர்கள் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பி.இ. படிப்புக்கு உரிய பாடங்களில் 120 பேரும்,
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய முக்கியப் பாடங்களில் 65 பேரும் 200-க்கு 200
கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்தனர். இந்த ஆண்டு இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால்
இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.