Pages

Tuesday, May 15, 2012

பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் அக்டோபருக்குள் லேப்-டாப்.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் அக்டோபருக்குள் இலவச லேப்-டாப் வழங்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இதுவரை 62 ஆயிரம் லேப்-டாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பள்ளிகளின் மூலமாகவே இந்த லேப்-டாப் விநியோகம் நடைபெற்று வருகிறது.
பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் லேப்-டாப் வழங்கப்பட்டதற்கான முத்திரை இடப்படும் எனத் தெரிகிறது. லேப்-டாப் வழங்கப்படாத மாணவர்களுக்கு அதற்கான முத்திரையும் மதிப்பெண் சான்றிதழிலேயே இடப்படும் எனத் தெரிகிறது. பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள், இந்த முத்திரையைக் காண்பித்து லேப்-டாப்புகள் தயாரான பிறகு பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் என மொத்தம் 9 லட்சம் பேருக்கு இலவச லேப்-டாப்புகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
லேப்-டாப்புகளை கொள்முதல் செய்து வழங்குவதற்காக லெனோவா, எச்.சி.எல்., ஏசர், எச்.பி., விப்ரோ, ஆர்.பி. இன்போசிஸ்டம்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரலுக்குள் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தாய்லாந்து நாட்டில் மழை, வெள்ளத்தால் ஹார்டு டிஸ்க் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, உற்பத்தி பாதிக்கப்பட்டதால் லேப்-டாப் விநியோகம் தாமதமாகத் தொடங்கியது.
அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றில் இறுதியாண்டு படிக்கும் சுமார் 1.7 லட்சம் மாணவர்களுக்கு கடந்த 2 மாதத்தில் இலவச லேப்-டாப் வழங்கப்பட்டது. இதற்கடுத்ததாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் லேப்-டாப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 5.3 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
சென்னையில் 27,500 லேப்-டாப்கள்: சென்னை மாவட்டத்தில் 27,500 மாணவர்களுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 ஆயிரம் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேப்-டாப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை மொத்தமாக 62 ஆயிரம் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபருக்குள் படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்பட்டு விடும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்பிறகு, கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பொறியியல் கல்லூரிகளில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. மொத்தமாக இதுவரை 2.3 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 6.7 லட்சம் லேப்-டாப்புகள் மாணவர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.